கோட்டைவிட்டது இந்தியா... இங்கிலாந்தில் ஏலம் போனது திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி!



ஜனவரி மாதம், இங்கிலாந்தின் பெர்க்‌ஷைர்  மாகாணத்தில் வாழும் தம்பதி தமது வீட்டுப் பரணைச் சுத்தம் செய்யும்போது கிடைத்த பழைமையான வாள்கள், நெருப்பு வைத்து வெடிக்க வைக்கும் கைத்துப்பாக்கி (தீக்கல்லியக்கத் துப்பாக்கி - flintlock gun), 

வெற்றிலைப் பெட்டி என்று எட்டுப் பழைமையான தொல்லியல் பொருள்களைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, இவை அனைத்தும் ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் (Antony Cribb Arms & Armour Auctions) எனப்படும் ஏலம்விடும் நிறுவனத்திடம் ஏலம் விடுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. இவை, அனைத்தும் திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருள்கள் என்று கண்டுபிடித்தனர். கிழக்கிந்தியக் கம்பனியின் மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர் மூலம் 1799 -ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கும் திப்பு சுல்தானுக்கும் நடைபெற்ற போர் முடிந்தபிறகு இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டவை ஆகும்.

இந்தப் போரியல் கருவிகள் அனைத்தும் நேற்று (26.3.19) ஏலம் விடப்படுவதாக  ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் நிறுவனத்தால் ஒரு மாதத்துக்கு முன்பே அறிவித்தது. இந்தத் தகவலை, இந்தியா பிரைட் பிராஜெக்ட் எனப்படும் தன்னார்வ அமைப்பு இங்கிலாந்தில் இயங்கும் இந்தியத் தூதரகத்துக்குத் தெரிவித்தது. உடனே, இந்தியத் தூதரகமும் இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்தி தொல்லியல் பொருள்களை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இந்தியத் தூதரகத்தின் முயற்சி தோல்வியடைந்து, திட்டமிட்டபடி அனைத்து அரியப் பொருள்களும் நேற்று ஏலம் விடப்பட்டன. 

இந்த அரிய பொருள்கள் அனைத்தும் ஒரு மில்லியன் பவுண்டுக்கும் மேலே ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியத் தூதரகத் தரப்பில் எழுந்த எதிர்ப்பினால் இவை அனைத்தும் 1,07,000 பவுண்டுக்கே ஏலம் போனது. அதிகம் விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டவை, திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கியும், ஹைதர் அலியின் சின்னம் பொறிக்கப்பட்ட வாளும்தான். இந்தக் கைத்துப்பாக்கி வெள்ளியால் ஆனது. தங்க முலாம்பூசப்பட்டது. இது 60,000 பவுண்டுக்கு விலை போனது. தங்கக் கைப்பிடியால் ஆன திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் 18,500 பவுண்டுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வெற்றிலைப் பாக்குப் பெட்டி 17,500 பவுண்டுக்கும், தங்கத்தாலான கிழக்கிந்தியக் கம்பனி முத்திரைப் பதக்கம் 2800 பவுண்டுக்கும் விலை போயின.

திப்புவின் வாள்

கடந்த வருடம், ஏலம் விடப்படும் நிலையில் இருந்த நாலந்தா புத்தர் சிலை, இந்தியா பிரைட் பிராஜெக்ட் முயற்சியின் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று திப்பு சுல்தானின் இந்த அரிய கலைப் பொருள்களும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அவை ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டிருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொல்லியல் பொருள்களை யார் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments