ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒரு பார்வை!



ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்), பரமக்குடி (தனி), திருவாடானை மற்றும் அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 

வாக்காளர்கள் எண்ணிக்கை:

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 52,761 ஆகும். இதில் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 79,643 பேர். கடந்த 1952ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய செல்வாக்குடன் இருந்து வந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த நாகப்பசெட்டியார்,  கருப்பையா அம்பலம், அருணாசலம் ஆகியோர் 1962 வரையிலான தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றனர்.

ஆனால்,  1967-இல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையான எஸ். முகம்மது ஷெரீப் என்பவர் காங்கிரஸின் செல்வாக்கைத் தகர்த்து வெற்றி பெற்றார். பின்னர் 1971ஆம் ஆண்டு பார்வர்டு பிளாக் வேட்பாளர் பி.கே. மூக்கையாத் தேவர் வென்றார். 

தொடர்ந்து  எம்.ஜி.ஆரால். அதிமுக தொடங்கப்பட்ட பிறகு 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றார். கடந்த 1980ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் எம்.எஸ்.கே. சத்தியமூர்த்தியும்,  கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 3 மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸைச் சேர்ந்த ராஜேஸ்வரன் இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் அதிகமாக இத்தொகுதியில் வென்றுள்ளது.  எனினும், காங்கிரஸில் இருந்து ஜி.கே. மூப்பனார் பிரிந்த பிறகு 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட உடையப்பன் வென்றார். கடந்த 1998 இல் மீண்டும் அதிமுக கூட்டணியில் சத்தியமூர்த்தியும், 1999ஆம் ஆண்டு  அதிமுக வேட்பாளர் மலைச்சாமி ஐ.ஏ.எஸ். ஆகியோரும் வென்றனர். 2004 ஆம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2009 இல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அக்கட்சியின் ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றார். 

கடந்த 2014 தேர்தலில் அதிமுக சார்பில் ஏ. அன்வர்ராஜா வெற்றி பெற்றார். இத்தொகுதியில் சு. திருநாவுக்கரசர்  காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 1996ஆம் ஆண்டில் தமாகா பிரிவுக்குப் பின் தனது செல்வாக்கை இழந்தது. கூட்டணி அமைந்தாலும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடியாத நிலையே அக்கட்சிக்கு உள்ளது.

2019 தேர்தலில் திமுக கூட்டணியில் இத்தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கே. நவாஸ் கனி போட்டியிடுகிறார். திமுக வழியில் அதிமுகவும் இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டு கொடுத்துவிட்டது. அதன்படி பாஜக வேட்பாளராக என். நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். டி.டி.வி. தினகரனின் அமமுக சார்பில் வ.து.ந. ஆனந்த் களமிறங்கியிருப்பது. இங்கு மும்முனை போட்டிக்கு வித்திட்டுள்ளது. 

தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்: 

தொகுதியின் முக்கியப் பிரச்னைகளாக குடிநீர்,  சாலை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் உள்ளன. மேலும், ராமேசுவரம் மீனவர்கள் பிரச்னை, விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்காதது என தொகுதி முழுவதும் பொதுவான பிரச்னைகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளாக தொகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, வளர்ச்சியோ இல்லை என்பதையும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சிகளின் சாதனைகளாக ராமேசுவரம் தனுஷ்கோடி புதிய சாலை, மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை, புதிய பாம்பன் பாலம் அமைக்கும் திட்டம்,  இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் தாக்கப்படாமல் காக்கும் வகையிலான ஆழ்கடல் மீன்பிடித்  திட்டம், மத்தியில் மீனவர்களுக்கான தனித்துறை மற்றும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளை மீட்பது ஆகியவை இரு கூட்டணி கட்சியினராலும் தேர்தல் வாக்குறுதிகளாக பட்டியலிடப்படுகின்றன.

2009 தேர்தலில் வெற்றி நிலவரம்

ஜே.கே. ரித்தீஷ் (திமுக)     -    2,94,945
எம். சத்தியமூர்த்தி (அதிமுக)    -    2,25030
சு. திருநாவுக்கரசர் (பாஜக)    -    1,28,322
ஜின்னா (தேமுதிக)    -       49,571

2014 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விபரம்:

ஏ. அன்வர்ராஜா (அதிமுக)    -    4,05,945
அப்துல்ஜலீல் (திமுக)    -    2,88,621
குப்புராமு (பாஜக)    -    1,71,082
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)    -      62,160
உமாமகேஸ்வரி (இந்திய கம்யூனிஸ்ட்)    -      12,640

Post a Comment

0 Comments