புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை தகவல்களை பிரத்யேக செயலி மூலம் அறியலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்



புயல் முன்னெச்சரிக்கை விவரங்களை அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை பொதுமக்களும் அவரவர் செல்லிடப்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி பேசியது:
இந்தியக் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி புயல் உருவாகலாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடலோரக் காவல் படை, தீயணைப்புத் துறை, காவல் துறை மற்றும் அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீன்வளத் துறையினர் மீனவர்களுக்கான உரிய அறிவிப்புகளை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். 

வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள் தினமும் புயல் தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
TN SMART என்ற புயல் குறித்த விவரங்களைப் பகிர பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  அனைத்துத் துறை அலுவலர்களும் இந்தச் செயலியை தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்தச் செயலி மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிடும் அறிவிப்புகளை கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் இந்தச் செயலியை தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments