வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் விளக்கம் கோரலாம்: நீதிமன்றத்திலும் இழப்பீடு கேட்க வழியுண்டு



வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் போனவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கங்களை கோரவும், அதன் மூலம் நீதிமன்றத்துக்கு சென்று இழப்பீடு கோரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் சிலர் வாக்களிக்க முடியாமல் போனது.

வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் வாக்களிக்க முடியாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல், தமிழகம் முழுக்க பரவலாக பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் பிரச்சினை எழுந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாதவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய விளக்கங்களை கோரி, நீதிமன்றங்களில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரவும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழியுள்ளதாக, திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அ.பிரம்மா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: எவ்வித காரணமும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியிருந்தால், அது அரசுத்துறை அதிகாரிகளின் சேவை குறைபாடாகும். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வாக்காளர் ஒருவர் கோரலாம்.

வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை கோரலாம். இதற்கான செலவு 10 ரூபாய்தான்.

அவ்வாறு தகவல்களை கோரும்போது அந்த மனுவில் இடம்பெற வேண்டிய கேள்விகள்: 

நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர் எண் நீக்கப்பட்டுள்ளது. நீக்கம் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் படிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் நகல் தருக. பெயர் எந்த தேதியில் நீக்கப்பட்டுள்ளது. தேதி, மாதம், வருடம் தருக. வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணம் அடங்கிய விவரம் மற்றும் அதன் நகல் தருக. உள்ளிட்ட தகவல்களை கேட்க வேண்டும்.

வழக்கு தாக்கல் செய்யலாம் தகவல்கள் கிடைத்ததும் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள், ஆவணங்களின் அடிப்படையில் தவறுதலாக மற்றும் போலியான ஆவணங்களை, போலியான தகவல்களை கொடுத்து உங்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்து, பெயர் நீக்கம் செய்த அரசு அதிகாரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

மனித உரிமை மீறல்பெயர் நீக்கம் செய்த அதிகாரி மீது மனித உரிமை மீறல் செய்ததற்கு இழப்பீடு கோரியும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் எடுத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதியை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments