கோடை விடுமுறையை கழிக்க எழில்கொஞ்சும் சதுப்புநிலக் காடுகள்... காண்போரை கவரும் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை..!



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சதுப்புநிலக்காடுகளை உள்ளடக்கிய காரங்காடு கடற்கரைப்பகுதி கோடை சுற்றுலாவுக்கு ஏற்றதாக எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது.


மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், அரிய கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக காரங்காடு கடற்கரை அமைந்துள்ளது. இப்பகுதியை வனத் துறையினர் ‘சூழல் சுற்றுலா’ மையமாக அறிவித்துள்ளனர்.

இங்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளன. இந்த சதுப்புநிலக் காடுகளில் கண்ணா செடிகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து வருகின்றன.

இங்கு நீர் காகம், கொக்கு, பிளமிங்கோ உள்ளிட்ட உள்ளிட்ட 13 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன.


சதுப்புநிலக் காடுகளுக்கு மத்தியிலுள்ள திட்டில் 150 அடி உயரத்தில் வனத்துறையினர் காட்சி கோபுரம் ஒன்றை அமைத்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கோபுரத்தின் மீது நின்று கடல் மற்றும் காட்டின் அழகை ரசிக்க முடியும்.

அதேபோல் இப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலின் ஆழம் மிகக் குறைவாக உள்ளது. ஆழம் குறைவாக உள்ளதால் கடலுக்குள் மூழ்கி கடல்வாழ் உயிரினங்களை ரசிக்கவும் முடியும். இதற்கென சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.


படகு சவாரியில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், 150 ஆண்டுகள் பழமையான மாதா கோவிலின் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேரிமாதாவின் சிலையை தரிசித்தபடியே தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் இளைப்பாறி தங்கள் பயணத்தை தொடர ஏதுவாக கிடுகு குடில் உள்ளது. இங்கு தரமான உணவு மற்றும் குடிசை தொழில் மூலம் அங்கேயே தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சீடை, காரப்பொருட்கள் போன்ற பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மொத்தத்தில் இந்தக் காரங்காடு சதுப்புநில சூழல் சுற்றுலா மையம் அமைதியையும் சுவாரசியத்தையும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

வீடியோ தொகுப்பு:


Map Location:

Post a Comment

0 Comments