கிராம சபை கூட்டம்: எதற்காக..! ஏன்..! நடத்தப்படுகிறது..! உங்களின் உரிமை என்ன?..!!ஆட்சியும் அதிகாரமும் எங்கிருந்தோ பெறப்படுகிறதோ, அங்கேயே அது மீண்டும் தரப்படும் என்பதற்கான சான்றுதான் ஓட்டு உரிமையும், கிராம சபையும்.

தமிழகத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் கிராம சபை கூட்டம் என்பது வெறும் மக்களை திரட்டி கூட்டம் போட்டு பேசுவது மட்டும் என்று கிடையாது. இதன் முக்கிய அம்சங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்

கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கலாம். அதாவது, அந்த கிராமத்திற்கு இந்த திட்டம் தேவையா தேவை இல்லையா என மக்களே முடிவு செய்யலாம் அதாவது

உங்கள் ஊர் உங்கள் உரிமை.
உங்கள் ஊர் உங்கள் பொறுப்பு.

உங்கள் ஊரில் மணல் அள்ள வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் ஊருக்கு மதுக் கடை வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் ஊருக்கு அணு உலை வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும்.

கூட்டத்தின் அறிவிப்பு

கூட்டம் நடத்தப்படும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறிப்பாக தேதி மற்றும் நேரம் கூட்டம் நடைபெறும் இடம், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் உள்ளிட்டவை  குறித்து  குறிப்பிடப்பட  வேண்டும்.

கிராம சபையின் தலைவர் யார்?

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்

கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். .

எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது

மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும் .
இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்.

Post a Comment

0 Comments