புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மடிக்கணினி. அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்புதுக்கோட்டை மாவட்டத்தில், 2 மாதங்களுக்குள் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.


அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,  இத்தொகுதிக்குள்பட்ட 18 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 7230 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி, மேலும் அவர் பேசியது: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத்தொடரும் வகையில், தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். 

மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயருவதற்கு இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தற்போது பிளஸ்2 படித்து வரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு முன்பு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று, இதுவரை  மடிக்கணினி பெறாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு  2 மாதங்களுக்குள் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.இந்த விழாவுக்கு  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரத்தினசபாபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வீட்டுவசதி  வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மு.ராஜநாயகம்,  ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பி.எம்.பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் சி.திருநாவுக்கரசு, நகர வங்கித் தலைவர் ஆதி. மோகன்குமார்  உள்ளிட்டோர்  விழாவில் பங்கேற்றனர். நிறைவில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை  சி.கார்த்திகா நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments