அறந்தாங்கி தொகுதியில் ரூ.42 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முடக்கம்



தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் என 3 மாவட்டங்களை எல்லையாக கொண்ட தொகுதியாகவும் இது விளங்குகிறது. அறந்தாங்கி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள், மணமேல்குடி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள், அரிமளம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள், அறந்தாங்கி நகரில் 27 வார்டுகளை கொண்டது அறந்தாங்கி தொகுதி.
அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் கிடைத்து வந்த குடிநீர், நாளடைவில் கடல் நீர் உட்புகுந்ததால், உப்பு நீராக மாறியது. இதனால் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் வந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் அறந்தாங்கி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது பெயரளவில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அறந்தாங்கி தொகுதி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வருகிறது. அறந்தாங்கி தொகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வந்தபோதிலும், திட்டத்தில் செயல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. தண்ணீர் செல்லும் பகுதிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது.

அறந்தாங்கி தொகுதி கூட்டு குடிநீர் திட்டத்தில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து வரும் தண்ணீரை உயர்மட்ட மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து பின்னர், கிராமங்களுக்கு தண்ணீர் குழாய் வழியாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு தண்ணீர் செல்லும் குழாய்கள் உடைந்து, அதில் இருந்து தண்ணீர் வெளியேறினாலும், அதை உடனே சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

அறந்தாங்கி தொகுதிக்கு செயல்படுத்தப்படும் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளதால், அவர்கள் முறையாக குழாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள், நீரேற்று நிலையங்களில் உள்ள இயந்திரங்களை பராமரிப்பதில்லை. நீரேற்று நிலையத்தில் உள்ள பல இயந்திரங்கள் துரு ஏறியும், உடைந்தும் போய் உள்ளன. பல நேரங்களில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தண்ணீர் வந்தாலும், அந்த தண்ணீர் முறையாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்வதில்லை.

அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட 704 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும், சுமார் 500கிராமங்களுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை. காவிரி செல்லும் கிராமங்களிலும், அங்குள்ள மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தனியார் லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.10 கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கி தொகுதி மக்களின் நலனுக்காக ரூ.42 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால், இப்பகுதி மக்கள் மாதம் ஒன்றிற்கு சுமார் 900 ரூபாய் வீதம் குடிநீருக்காக செலவிடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் நன்மைக்காக மக்களின் வரிப்பணத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், தமிழக அரசும் முறையாக பராமரிக்காததால், மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.42 கோடியும் கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகி வருகிறது.

கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் புகார் கூறும் பொதுமக்கள் தங்கள் நிலையை எண்ணி வேதனைப்படும் நிலை உள்ளது.
அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரங்களைச் சேர்ந்த 704 குடியிருப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட காவிரிகூட்டுக்குடிநீர் திட்டம், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் அறந்தாங்கி தொகுதியில் முறையாக செயல்படாமல் உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, தனியார் தண்ணீர் உற்பத்தியாளர்கள் தினசரி பல லட்சம் தண்ணீரை உறிஞ்சி லாரிகள், ஆட்டோக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். எனவே தமிழக அரசு அறந்தாங்கி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை பராமரிக்கும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்து, அறந்தாங்கி தொகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் கூறியது:

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அறந்தாங்கி நகராட்சி பகுதிக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நகராட்சிக்கு வருகிறது. இருப்பினும் அறந்தாங்கி நகரில் நகராட்சிக்கு சொந்தமாக உள்ள 11 ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் 3 கோடியே 3லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. காவிரி தண்ணீருடன், நகராட்சி ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையும் சேர்த்து, அறந்தாங்கி நகருக்கு தினமும் 4 கோடியே 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கி வருகிறோம். இந்த 4 கோடியே 10 லட்சம் லிட்டர் தண்ணீரை முறையாக நகராட்சி பகுதிகளில் வினியோகம் செய்கிறோம். இதனால் அறந்தாங்கி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

குழாய்கள் பராமரிப்பில்லை

புதுவாக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் கூறியது: ரூ.42 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் பராமரிப்பு பணியை தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்காமல், தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கியதால், அவர்கள் குழாய்கள், இயந்திரங்கள், மோட்டார்கள் போன்றவற்றை பராமரிக்கவில்லை. இதனால் அறந்தாங்கி தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் தனியாரிடம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையில் உள்ளனர்.

குடிநீர் குழாய் உடைந்துபோய், தண்ணீர் வெளியே போனால் கூட அதை சீரமைக்க, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள் வந்தால் மட்டுமே, குழாய்களை சீரமைக்க முடியும். ரூ.42 கோடி திட்டத்தின் பயன் அறந்தாங்கி தொகுதி மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. திட்டத்தின் பயன் மக்களுக்கு போய் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments