சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வேலி அமைத்து துணை நிற்கின்றன! - எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு



மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, அவசகரதியில் சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தத்தை முன்வைத்து, அறுதிப் பெரும்பான்மையோடு பாராளுமன்றத்திலும், ஆளும் கட்சிக்கு வேலி அமைத்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மாநிலங்களவையிலும் நிறைவேற்ற பெரும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றது.

தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் திருத்தச் சட்டத்தை சூழ்ச்சியோடு, எதிர்க்கட்சிகளின் பலவீனமான எதிர்ப்பில் கடந்த வாரம் நிறைவேற்றி முடித்த கையோடு, தற்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) திருத்தத்தில் அதன் செயல்திறனைக் குறைக்கும் விதமாகவும், கடந்த ஜூலை 25 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றி இருக்கிறது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி தனது அறிக்கையில் குறிப்பிடும்போது; “நாட்டில் நடைபெறும் அரசியல் சூழல் என்பது பொம்மலாட்ட நகைச்சுவை போன்று உள்ளது. உச்சபட்ச ஆச்சரியம் என்னவெனில் ஒடிசாவின் பிஜு ஜனதாதளம் தகவல் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததுதான். தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் தங்களுடைய சுய லாபங்களுக்கு தக்கவாறு நிலைபாடுகளை மாற்றிக் கொண்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது.

இன்றைய அரசியல்வாதிகள் கொள்கைகளை இழந்து மிடுக்கான ஆடை அணிந்தவர்களாகப் பம்மாத்து காட்டுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் என்பவை, பிரதமர் அலுவலகத்தின் கைப்பாவையாகத் தேசிய தகவல் ஆணையம் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்படி பிரதமர் அலுவலகத்தின் உதவியோடு செயல்பட்டதோ அதேபோன்று தான் இதிலும் தொடரும்.

இவை நடக்காதென பிஜு ஜனதா தளமும், தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் உறுதியாகச் சொல்லமுடியுமா? இந்த விவகாரத்தில் அவர்கள் நியாயமான முகத்தோடு நடத்துகொள்ள வேண்டும்.

ஒரு ஆட்சியின் மறைமுகமான சர்வாதிகாரத்தால், தன்னாட்சி அமைப்புகளின் கழுத்தை நெரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகத்தின் மீதான படுகொலை. ஆளும் அரசு பி.ஜெ.டி மற்றும் டி.ஆர்.எஸ்-இன் துணையோடு ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருக்கிறது.

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம், அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்தம் போன்றவை ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. கருத்து வேறுபாட்டிற்கான உரிமை என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைக்கூறு. ஆனால், பயங்கரவாதி யார்? நிரபராதி யார்? என்பதைத் தீர்மானிக்க மத்திய நிறுவனத்தை அனுமதிப்பதன் மூலம் அந்த உரிமை நீர்த்துப் போகிறது.

தீவிரவாத தடுப்பு சட்டங்களான தடா, பொடா போன்றவை மதச் சிறுபான்மையினர், தலித்கள், பழங்குடிகளை நசுக்குவதற்காகத்தான் இயற்றப்பட்டன. சமீபத்தில் திருத்தப்பட்ட யு.ஏ.பி.ஏ. சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments