கோட்டைப்பட்டினத்தில் மைக்செட் உரிமையாளர் வீட்டில் 7 மாதத்திற்கு முன் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மீமிசலில் கைதுபுதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 45). இவர் அதே பகுதியில் கார் டிராவல்ஸ் மற்றும் சவுண்டு சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13/11/2018-ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் நூர்தீன் புகார் அளித்தார். அதன் பேரில் கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேரிடம் விசாரணை:
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் மற்றும் கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் சந்தேகப்படும்படி சில நபர்கள் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் மீமிசல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையம் அருகே மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 7 மாதத்திற்கு முன் கோட்டைப்பட்டினம் பகுதியில் நூர்தீன் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து 50 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு:
தொடர்ந்து அந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்ததில் அந்த நபர்கள் அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமநாதன் (30), அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அருண்குமார்(30) மற்றும் கும்பகோணம் அருகே உள்ள ஆவூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் மணிகண்டன் (40) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேர் மீதும் 50-க்கும் மேலான திருட்டு வழக்குகள், வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

பின்னர் இந்த 3 பேர் மீதும் கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடித்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 

Post a Comment

0 Comments