கோட்டைப்பட்டினத்தில் குப்பைகளை அள்ளாததால் தொடரும் சுகாதார சீர்கேடுகள்!! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !!!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சியின் மெத்தனப்போக்கால் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன.இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தெற்குபுகுக்குடி ஓடாவிமடம் மீனவர் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம், கொடிக்குளம், சகோதரபுரம், ராஜா தியேட்டர் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமான அளவில் குவிந்து கிடக்கிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உட்கொள்வதால் இறக்க நேரிடுகிறது. மேலும் குப்பைகளால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி விடுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் துப்புறவு பணியாளர்களும், தூய்மை காவலர்களும் சரி வர தங்கள் பணிகளை செய்வதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.


2017-2018ம் ஆண்டில் கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இக்குப்பை தொட்டிகளை ஊராட்சியின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கொண்டு சென்று வைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது இப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரைக்கும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கினை கைவிட்டு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான சுற்றுப்புறத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Post a Comment

0 Comments