கோபாலப்பட்டிணத்தில் வீதிகளை ஆக்கிரமித்துள்ள தெரு நாய்கள்: குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பீதி — ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில், சமீபகாலமாக தெருநாய்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சாலையில் செல்வோர் என அனைவரும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

​குறிப்பாக, பள்ளி மற்றும் மதரஸாக்களுக்குச் செல்லும் குழந்தைகளையும், தையல் பயிற்சிக்குச் செல்லும் பெண்களையும் இந்த நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து துரத்துகின்றன. இதனால் மாலை நேரங்களில் வெளியே செல்லவே குழந்தைகள் கடும் அச்சப்படுகின்றனர். தெருக்களில் விளையாட வரும் சிறுவர்களைப் பார்த்து நாய்கள் குறைப்பதும், அவர்கள் பயந்து ஓடும்போது விரட்டிச் செல்வதுமாக இருப்பதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு தடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

​மனிதர்களை மட்டுமின்றி, வீதிகளில் செல்லும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் இந்த நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடித்துத் துன்புறுத்தும் அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தத் தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி நிர்வாகமும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, நாய்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோபாலப்பட்டிணம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments