மணமேல்குடி நகரில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா



மணமேல்குடி நகரில் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் நகரின் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல பகுதியில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்கவும் அதில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் காவல்துறை பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கொலை,கொள்ளை,விபத்து போன்ற சம்பவங்களை தடுப்பது என்பது காவல் துறைக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக மணமேல்குடி காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கியமாக சந்தைப்பேட்டை, பெண்கள் பள்ளி, தண்டலை ரோடு முக்கம், அரசு மருத்துவமனை,பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் இருந்தவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய உதவியாக இருக்கும் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காவல்துறையின் இந்த முயற்சிக்கு  பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Post a Comment

0 Comments