புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏடிஎம் சேவை தொடக்கம்



புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வரும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏடிஎம் சேவையை மாவட்டஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் ஏடிஎம் சேவையை தொடங்கி வைத்து அவர் கூறியது:

கிராமப்புறங்களில் மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்பு அலுவலர் மற்றும் பாதுகாவலர் இதில் பணியில் இருப்பார்கள். சிசிடிவி கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

 வங்கிக் கணக்குள்ளவர்கள் பணம் எடுக்கும் ஏடிஎம் சேவையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கணக்குள்ளவர்கள் தங்களது கணக்குப் புத்தகங்களில் பதிவுகளைச் செய்யவும் இயந்திரங்கள் இருக்கும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலை நாட்களில் கிராமப்புறங்களில் இந்த நடமாடும் ஏடிஎம் வாகனம் சென்று திரும்பும். கிராமப்புற மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் உமாமகேஸ்வரி.

 நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளர் லச்சையா, புதுக்கோட்டை முதன்மை மேலாளர் சந்தானராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் ஏடிஎம் சேவை வழங்கும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments