கோபாலப்பட்டினத்தை சேர்ந்த வழக்கறிஞர் Lr. நைனார் முகமது அவர்கள் SDPI கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு!எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் உள்ள பிரஸிடெண்ட் ஹோட்டல் அரங்கில் ஜூலை 19 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் அணியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அதன்படி வழக்கறிஞர் அணியின் மாநில தலைவராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜஹாங்கிர் பாஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நெளஃபல், எஸ்.ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோரும், செயலாளராக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முகமது, பொருளாளராக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுலைமான் பாஷா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், வழக்கறிஞர்கள் முகமது இல்யாஸ், சப்ரே ஆலம், சர்தார் மற்றும் சஃபியா ஆகியோர் இணைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் நஜ்முதீன், ஷாஜஹான், நவுஃபல், சாஹிரா பானு, பரக்கத்துல்லாஹ், ஜாக்லால், நிஜாம், பைசல், தமீம் அன்சாரி, அப்துல் காதர், ஆரிப், ஒலி முகமது, இஸ்மாயில், ஷேக் முகமது அலி, ஹசன் முகமது, நைனார் முகமது, மசூதா மரியம், முகமது ஷாஜஹான் மற்றும் முர்தாசா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து புதிய மாநில செயற்குழு கூட்டத்தில் வழக்கறிஞர் அணியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ என்ற மனித உரிமை அமைப்பின் தலைவர்களுமான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோர் இல்லங்களில் சிபிஐ மூலம் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டதற்கு செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சமூக மற்றும் பொதுநலனை கருத்தில்கொண்டு மனித உரிமை மீறல் வழக்குகளையும், பொதுநல வழக்குகளையும் எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி மூலம் எடுத்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு உண்டான வழக்குகளை மீண்டும் நீதிமன்றம் மூலமே தீர்வு வழங்குவதற்குண்டான அதிகாரத்தை தமிழக அரசு வழங்க வலியுறுத்தியும், வாடகை கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் நீதிமன்றங்களின் வாயிலாகவே தீர்வுக்கு உண்டான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டி, அந்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 107 –ன் படியான நடைமுறையை, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு வழங்கியுள்ள அதிகார சட்டப் பிரிவுகளை, வழக்கு தேக்க காலம் மற்றும் பொருளாதார வீண்விரயத்தை தடுக்கும் பொருட்டு, வழக்கு நடைமுறை அதிகாரத்தை மீண்டும் நீதிமன்றமே செயல்படுத்த சட்டத்தில் திருத்தங்களை அரசு கொண்டு வரவும், மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வரும் நபர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது மிகப்பெரிய தடையாக இருப்பதால், அதனை தீர்ப்பதற்குண்டான உரிய வழிவகைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் வழ.ராஜா முகமது நன்றியுரையுடன் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நிறைவுற்றது.

Post a Comment

0 Comments