கலப்பட மருந்தால் பகீர்.. உடல் முழுவதும் ரோமம்.. 17 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்புகலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் 17 ஆக அதிகரித்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய மருந்து இந்தியாவிலும் விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினின் மலாகாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். என்ற நிறுவனம் மருந்துக் கலப்பட சர்ச்சையில் சிக்கி உரிமத்தை இழந்துள்ளது.

ஒமர்ப்ரஸோல் என்ற ஜீரணகுறைப்பாட்டை சரி செய்யும் மாத்திரையில், மைனாக்ஸிடில் எனும் வழுக்கை, முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் கான்டபரியா, ஆண்டலூசியா உள்ளிட்ட நகரங்களில் 13 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் நோய் தாக்கியுள்ளது.

இந்த நோயால் உடலில், அபரிமிதமான ரோம வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம், ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் பேட்ஜில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மேலும் 4 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்டலூசியா பகுதியில் 50 மருந்தகங்களில் 30 பேட்ஜ்கள் வரை மருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், மக்கள் எச்சரிக்கையோடு அந்த வகை மருந்துகளை பயன்படுத்துமாறு ஸ்பெயின் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

க்ரனடா ஹோய் என்ற நிறுவனத் தகவல்படி, அந்த மருந்துக்கு இந்தியாவிலும் ஒரு விநியோகஸ்தர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments