அரசை நம்பாமல் வலைதளம் மூலம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட எரிச்சி கிராம இளைஞர்கள்!!!



அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதி என்கிற எரிச்சி கிராமத்தில் வலைதளம் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடு  நண்பர்கள் இணைந்து நன்கொடை திரட்டி, ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் கிராமத்தின் குடிநீர் பிரச்னைக்கு தன்னிறைவு அடிப்படையில் தீர்வு கண்டுள்ளனர்.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சியை சேர்ந்த எரிச்சி கிராமத்தில், வறட்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால்  ஊராட்சி நிர்வாகம் மூலம் எந்த திட்டப்பணிகளும் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்  மூலமாக குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக நிதி திரட்டும் முயற்சிகளை இளைஞர்கள் மேற்கொண்டனர். இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் ரூ. 5.29 லட்சம் நிதி திரட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, எரிச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் எனப்படும் சிவன் கோயில் பொது இடத்தில் 500 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.


 மிகவும் சுவையான குடிநீர் வந்ததும் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் தற்போது அப்பகுதி மக்களின்
குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், பள்ளி மற்றும் பொது இடங்களில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு இந்த
இளைஞர்கள் பராமரித்து வருகின்றனர்.

அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் தாங்களே செயலில் இறங்கி நடவடிக்கை எடுத்த காரணத்தால் தற்போது தங்கள் கிராமம் குடிநீருக்கு அலையாமல் தன்னிறைவு பெறும் நிலையில் உள்ளதாக இந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments