ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி...!! ஆபத்தான அறிகுறி...!!!



இந்திய ஆட்டோ மொபைல் துறை, கடந்த2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. நாட்டின் முன்னணிவாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மாருதி சுசுகிபோன்ற நிறுவனங்களே, தங்கள் உற்பத்தியைநிறுத்தி வைக்கும் அளவிற்கும், தொழிற்சாலைகளை மூடும் அளவிற்கும் நிலைமை மோசமாகிவருகிறது.

இப்போதே ஆட்டோ மொபைல் துறையை நம்பியிருந்த சுமார் 30 லட்சம் பேர் வேலையிழப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஆட்டோ மொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து,பொருளாதார வல்லுநர் ஜெ. ஜெயரஞ்சனிடம் ‘மின்னம்பலம்’ இணையதள ஏடு நடத்திய நேர்காணலும், அதற்கு ஜெயரஞ்சன் அளித்த பதில்களும் வருமாறு:

வியாபார மந்தநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பதில்: விற்பனையை ஒவ்வொரு ஆண்டும்அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுவர், அல்லது இந்த காலாண்டை இதற்கு முந்தையகாலாண்டோடு ஒப்பிடுவர். இப்படி பார்க்கும் போது கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு
இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிலும் கடந்த 15லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிசென்று கொண்டிருக்கிறது. இதையே வியாபாரமந்தநிலை என்று கூறுகிறார்கள். மோட்டார் வாகன உற்பத்தி துறை மட்டுமல்ல பல துறைகள்தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அந்த வீழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.

மோட்டார் வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கான காரணம் என்ன?

சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள், அதற்குப்பின் கார், ஆடம்பர கார், லாரி, பஸ், டிராக்டர்ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மோட்டார் வாகன உற்பத்தித் துறை.

 இதில் உள்ள ஒவ்வொரு வாகனப் பிரிவுகளும் ஒவ்வொரு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

உதாரணமாக டிராக்டர் உற்பத்தியில் மந்தநிலை ஏற்படுகிறது என்றால் கிராமப்புறங்கள் நன்றாக இல்லை என்று அர்த்தம். விவசாயம் செழிப்பாக இல்லை என்றால் டிராக்டர்கள் வாங்குவது குறைந்து போகும்.

கிராமப்புற, நகர்ப்புறங்களைச் சார்ந்த கீழ் நடுத்தர வகுப்பினரிடம் வேலைவாய்ப்பு, பணப்புழக்கம் இல்லை என்றால் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இருக்காது.உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைகிறது என்றாலும் கார்கள் விற்பனை  குறைந்துவிடும்.

புதிய தொழில் தொடங்கப்படவில்லை என்றால், தொழிலுக்கான மூலதனங்கள் குறைந்து போனால் சரக்கு போக்குவரத்துக்கான லாரிகள் விற்பனை குறைந்து போகும். ஆக ஒட்டுமொத்தமாக மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் வியாபாரம் மந்தநிலையைஅடைந்ததற்கு காரணம், அனைத்து தரப்பிலும் பணப்புழக்கம் இல்லை, பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்துள்ளது.

இந்தத் துறையில் உள்ள சுமார் பத்து நிறுவனங்கள் சில நாள்கள் தொழிற்கூடங்களை மூடுவதால் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்?
ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கு பின்னாலும் ஆயிரம் சிறிய நிறுவனங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு ஒரு பிரபல நிறுவனம் கார் தயாரிக்கிறது என்றால், முழு காரையும் அந்த நிறுவனம் தயாரிப்பதில்லை.

காரில் உள்ள உதிரிபாகங்கள் அனைத்தும் தனித்தனி நிறுவனங்களில் தயாராகி பெரிய நிறுவனத்திற்கு வரும். அதாவது ஒரு நிறுவனம் காரின் டயரை மட்டும்தயாரிக்கும், இன்னொரு நிறுவனம் பிரேக்கை மட்டும் தயாரிக்கும், மற்றொரு நிறுவனம் எலெக்டிரிக் பாகங்களை தயாரித்து அனுப்பும்.காருக்கு தேவையான இரும்பு தகடுகள் ஒரு தொழிற்சாலையில் தயாராகும். அந்த இரும்பு ஒரு சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும்.
பெரிய நிறுவனம் அந்த பாகங்களை எல்லாம்சேர்த்து காரை உருவாக்கும்.

 இந்நிறுவனம் சிலநாள்கள் தொழிற்கூடத்தை மூடினால் அதற்குபாகங்களை விநியோகிக்கும் ஆயிரம் நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்த வேண்டும். அந்த நிறுவன ஊழியர்களும் குடும்பங்களும் வேலையிழப்பை சந்திக்க வேண்டிவரும்.

இந்த தற்காலிக வேலையிழப்பு நிரந்தர வேலையிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதா?

இது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இந்த தற்காலிக வேலையிழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வருவாய் பறிபோகிறது. இவர்கள்தான் சந்தையில் மோட்டார் வாகனங்களை வாங்க வேண்டும். பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள இவர்கள் சந்தையில் எப்படி வாகனங்களை வாங்குவார்கள்?

அப்படியெனில் மேலும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் மந்தநிலையை அடையும். அதனால் அதை நம்பியுள்ள நிறுவனங்கள், அதைச் சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு ஏற்படும். இதற்கு மல்டிபிளேயர் என்று பெயர்.அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை அடித்தால் ஒன்று மற்றொன்றை அடித்து சாய்த்துக் கொண்டே போகுமே அப்படியானது இது.

அப்படியானால் ஒட்டுமொத்தமாக அத்தனை தரப்பையும் பதம் பார்த்துவிடுமா இந்த வியாபார மந்தநிலை?

இல்லை. அதைத் தடுக்க வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு சரிந்துகொண்டே வரும் சீட்டுகட்டில் இடையில் இரண்டு சீட்டுகளை உருவிவிட்டால் போதும், பின்னால் உள்ள சீட்டுகள்விழாமல் தடுக்கலாம்.

 அதைப் போல் வியாபார மந்தநிலையைப் போக்க நிறுவனங்களுக்கு அரசு, வங்கிகள் மூலமாக நிதியை அளிக்க வேண்டும்.

 மேலும் இந்த வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த மந்தநிலையை குறைக்கலாம்.

மிக முக்கியமாக கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும், அரசு அவர் களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

 கிராமப்புறங்களில் தேக்கநிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக நாட்டின்அனைத்து துறைகளையும் பாதிக்கும். வாங்கும்திறன் அதிகரித்தால் தானே சந்தையில் விற்பனை இருக்கும்.

 அதைவிடுத்து வெளிநாட்டுநிறுவனங்களுக்கு எவ்வளவு சலுகைகள் அளித்தாலும் அவர்கள் தொழில் தொடங்க முன்வர
மாட்டார்கள்.

 தங்கள் பொருள்களை விற்கமுடியாவிட்டால் எப்படி வருவார்கள்.

 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாவிட்டால் இந்த சீட்டுகட்டு சரிவதை நிறுத்த முடியாது.

நன்றி: மின்னம்பலம்.காம்

Post a Comment

0 Comments