மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கான இயந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்புதுக்கோட்டை மாவட்டத்தில் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெவித்திருப்பது:

தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2016-17 முதல் 2019-20 வரையில் 1000 ஹெக்டேர் கொண்ட மானாவாரி நிலத்தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செயலாக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் நிதியாண்டில் விவசாயிகள் வேளாண் விளைப் பொருள்களை மதிப்புக்கூட்டி, அதிக லாபம் பெறும் வகையில், 150 மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் 75 சதவிகித மானியத்தில் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில் அமைக்கப்பட உள்ளன.

விளை பொருள்களைச் சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல், விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்த திட்ட செலவுத் தொகையில் 75 சதவிகிதம் அல்லது ரூ.10 லட்சம், இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவிகிதத் தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக் குழுவின் பங்களிப்பாக இருக்கும்.

ஓன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து பெரிய அளவிலான மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையிலும் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மதிப்புக் கூட்டு இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், 2017-18 ஆம் ஆண்டில்  இலுப்பூர் வட்டம், ஈஸ்வரன்கோவில் ஊராட்சி, கோவிந்த நாயக்கன்பட்டி அருகே இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பட்டிக்காடு வளாகம் என்ற இடத்தில் மதிப்புக்கூட்டு இயந்திர மையம் அமைக்கப்பட்டு பருப்பு அரைவை இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் உள்பட பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டு லாபகரமாக இயங்கி வருகிறது.

2018-19 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அறந்தாங்கி வட்டார மானாவாரி தொகுப்புகளில் 3 மதிப்புக்கூட்டு இயந்திர மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.   இதுபோல நிகழாண்டிலும் 4 மதிப்புக் கூட்டு இயந்திர மையங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிடம் வழங்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக் குழு, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்யும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்: 04322-221816 மற்றும் திருக்கோகர்ணம் உதவிச் செயற் பொறியாளர்- செல்லிடப்பேசி எண் 94432 64168, 99761 27540 மற்றும் அறந்தாங்கி உதவிச் செயற்பொறியாளர் செல்லிடப்பேசி எண்: 94421 78763, 94434 56682 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments