கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவத் தொழிலாளர்கள்  சார்பில் கோட்டைப்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர்களையும் மீன் வளத்தையும் காக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் சங்க மாவட்டச் செயலர் பகுருதீன் அலி தலைமை வகித்தார். ரஹமத்தலி முன்னிலை வகித்தார்.

மாவட்டத் துணைச் செயலர் அ. ராஜேந்திரன் தொடக்கவுரையாற்றினார், மீனவர் சங்க மாவட்டத் தலைவர் வி. சிங்கமுத்து நிறைவுரையாற்றினார்.
கடல் வளத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை நிறுத்த வேண்டும், மீன்பிடித் தடைகால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக தமிழக அரசு வழங்க வேண்டும், செல்லநேந்தல், ஜெகதாபட்டினம் துறைமுகத்தை உடனடியாகத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், செல்வராஜ், ராஜாமுகமது, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கே. ராஜேந்திரன் விவசாய சங்க ஒன்றியப் பிரதிநிதி கரு. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments