கட்டுமாவடியில் உப்பளம்- கடற்கரை இணைப்பு சாலை சேதம்... சீரமைக்கப்படுமா...?



கட்டுமாவடி ஊராட்சியில் உப்பளம்-கடற்கரை இணைப்புச் சாலை 19 ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. இதற்குப் பதிலாக புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி ஊராட்சியில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள உப்பளம் சாலை சேதமடைந்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த உப்பள சாலையும், முஸ்லிம் தெரு வழியாக கடற்கரைக்குச் செல்லும் இணைப்புச் சாலையும் கடும் சேதமடைந்துள்ளது. இந்தச் சாலை கடந்த 2001ம் ஆண்டு போடப்பட்டதாகும். அதன்பிறகு 4 ஊராட்சித் தலைவர்களும் பதவி முடிந்து சென்றுவிட்டனர். இந்த சாலை சேதமடைந்து மணல் திட்டுகளாக தெரிகிறது. இவ்வழியே அதிகமான பள்ளி வாகனங்கள் செல்கின்றன. அதிகளவில் வாகனங்கள் செல்வதால் மணல் மற்றும் தூசி பறந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால் சாலையில் செல்பவர்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதேபோன்று மழைக்காலங்களில் நடந்து செல்ல முடியாமல் சேறும், சகதியாக மாறிவிடுகிறது.

இந்த சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி, தனியார் மெட்ரிக் நர்சரி பள்ளி, துணை சுகாதார நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, உப்பளம் ரோடு, முஸ்லிம் தெரு, பள்ளிவாசல் தெரு, ஹாஜியார் நகர், மரைக்காயர் தெரு, மீனவர் தெரு மற்றும் கடற்கரைக்கு செல்லும் வழியாக உள்ளது.

 இந்த சாலை 2001ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அரசன் தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து சாலை அமைக்க உதவி செய்தார். தற்போது இந்த சாலை பல ஆண்டுகளை கடந்து விட்டதால் மோசமான நிலையில் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி: தினகரன்

Post a Comment

0 Comments