அரசு பள்ளியில் “பசுமை புரட்சி” சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளை வளர்க்கும் மாணவர்கள்..!!



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்சி வரும் மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, அதில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றனர். பசுமையாகக் காணப்படும் இந்தப் பள்ளி வளாகத்தைச் சுற்றி மாணவர்கள் நட்டுவைத்து பராமரித்து வரும் ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் காண முடிகிறது.


தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன முறை மூலம் மாணவர்கள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். சிறிய அளவில் துளையிட்ட மண் பானைகள் மூலமும் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப்படும் குப்பிகள் மூலமும் செடிகளுக்கும் மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். முன்மாதிரி பள்ளி என்ற சான்றிதழ் பெற்றுள்ள, பல விருதுகளையும் குவித்துள்ள இந்த பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் வருகை தந்து மாணவர்களின் பணிகளை பார்வையிட்டார்.


இளம் தலைமுறையினரின் மனதில் மரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பதியவைப்பதன் மூலம் பசுமையான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நம்புகின்றனர். 

Post a Comment

0 Comments