தொண்டியில் பேரிடர் தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை: கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்பு!பேரிடர் தடுப்பு, நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையில் கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. புயல் மற்றும் வெள்ளம் வரும் பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக புயல் மற்றும் வெள்ளம் எச்சரிக்கை முன்அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகைய எச்சரிக்கை அறிவிப்புகள் மாவட்ட அவசரகால செயலாக்க மையம் வாயிலாக பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மீட்புக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை எவ்வாறு சென்றடைகிறது என்பதை கண்காணித்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான திருவாடானை வருவாய் வட்டம், தொண்டி கிராமத்திலும், கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

அதன்படி, தொண்டியில் நடைபெற்ற பேரிடர் தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகையில் கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மழை வெள்ளம் காரணமாக தொண்டி கிராமத்தில் உள்ள தனியார் வணிக வளாகம் இடிந்து விழுந்து 80 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அவசர கால செயலாக்க மையத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு மீட்புப்பணிக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவல்துறை மீட்புக்குழு அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்கும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தொண்டி கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள முருகன் கோவில் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் மருத்துவ உதவி வழங்கிடும் விதமாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல மழைவெள்ளம் காரணமாக தொண்டியில் உள்ள தனியார் உணவு விடுதியில் 30 பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், தொண்டியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் 5 நபர்கள் சிக்கியுள்ளதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு மீட்புக்குழு அலுவலர்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து, தொண்டி அரசு மருத்துவமனையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தொண்டி கிராமப் பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில் முதலை தென்படுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக வனத்துறையின் மூலமும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் மாசு ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக எச்சரிக்கை செய்யப்பட்டு பொது சுகாதாரத் துறையின் மூலம் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல, கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் பல்வேறு அவசரகால எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொண்டி நிலைய அலுவலர் அருளானந்து, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேஷ்வரன், உதவி கலெக்டர்கள் சரவணக்கண்ணன், கோகிலா, செஞ்சிலுவைச்சங்க மாவட்டச்செயலர் ரேக்லாண்டுமதுரம் உள்பட அரசு அலுவலர்கள், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments