புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!!!



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ள
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் தோல்வி பெற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படமாட்டாது.

ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் வரத்தேவையில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணினை உதவித்தொகை விண்ணப்பத்துடன் இணைப்பதற்கு உடனே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் ஆதார் அட்டையுடன் வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments