புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: பெண் இடுப்பில் இருந்த 4.5 கிலோ புற்றுநோய்க் கட்டி அகற்றம்



பெண்ணின் இடுப்பில் இருந்து 4.5 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் அகற்றியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்தவா் தேவி (55). இவா், வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி காரணமாக கடந்த ஆக. 28 ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.


மருத்துவக் குழுவினரின் தொடா் பரிசோதனையில், இடுப்புப் பகுதியில் பெரிய கட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, மகப்பேறு மருத்துவத் துறையின் தலைமை மருத்துவா் அமுதா, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணா் பாரதிராஜா, ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணா் முரளி ஆகியோரைக் கொண்ட குழு கடந்த செப். 9 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது.

இந்த சவாலான அறுவைச் சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:

கால் பகுதியிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் ஒன்றில் இந்தக் கட்டி இணைந்திருந்ததால் ரத்தநாளம் சேதமடையாத வகையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதற்காக தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஏறத்தாழ நான்கரை மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்த 4.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றறப்பட்டது. ரெட்ரோ பெரிடோனியல் டியூமா் எனப்படும் புற்றுநோய்க் கட்டி இது.

தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 3 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

தொடா் மருத்துவக் கண்காணிப்பில் தேவி நலமாக உள்ளாா். ஓரிரு நாட்களில் அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா் என்று தெரிவித்தார் மீனாட்சிசுந்தரம்.

Post a Comment

0 Comments