5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் மனுஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் சனிக்கிழமை மனு அளித்தனர்.


இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் புதுகை செல்வா மற்றும் பெற்றோர்கள் சனிக்கிழமை காலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்தனர்.  அதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
5, 8-ஆம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வு நடத்துவது என்பது குழந்தைகள் மீது செலுத்தப்படும் குற்றமாகும்.  மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவில் இதுவும் ஒரு அம்சமாகும். வரைவுக் கொள்கை மீது கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முடிவு செய்யப்படவில்லை. ஆனால், அதில் கூறப்பட்டுள்ள பொதுத்தேர்வு அம்சம் மாநில அரசால் அமலாக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்த நாடுகளாகக் கருதப்படும் மேலை நாடுகளில் இதுபோன்ற எந்த பொதுத்தேர்வும் கிடையாது. குழந்தைகளை ஆசிரியர்கள்தான் தனித்தனியே கவனித்து மதிப்பிடுகிறார்கள். பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி திறன்களை வளர்க்க உதவுகிறார்கள்.

எனவே, தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டங்கள் நடத்தி, என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும். பெற்றோர் கூறும் கருத்துகளையும் பரிசீலிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments