டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? மருத்துவர் . ஃபரூக் அப்துல்லா



மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக நடைமுறைப்படுத்துவோம்.

தமிழகமெங்கும் கார்காலம் தொடங்கிவிட்டதால் நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோயான டெங்குவைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

டெங்கு வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய் நிலை. வைரஸை பரப்பும் வேலையை செவ்வனே செய்வது ஏடிஸ் எனும் கொசுவின் வேலை.

டெங்கு எவ்வாறு பரவும் ?

டெங்குவும் மலேரியாவும் பரவும் விதத்தில் ஒன்றானவை. டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசு யாரையெல்லாம் கடிக்கிறதோ அனைவருக்கும் டெங்கு நோய்க்கிருமி பரவும். இருமனிதர்க்கு நடுவே தொடுவதாலோ இருமுவதாலோ பரவுவதில்லை

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு எங்கே வளரும் ?

இந்த ஏடிஸ் எனும் எதிரி, நல்ல நீரில் வளரும் தன்மை கொண்டது. எங்கெல்லாம் நல்ல நீர் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் வளரும். 10 மில்லி நீர் போதும் இந்தக் கொசு முட்டையிட்டு வளர.

பொதுவாக வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் டெங்கு புழு காணப்படும் இடங்கள் ?

குப்பையில் கிடக்கும் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கொட்டாங்குச்சி சிரட்டைகள், அருந்திவிட்டு போடப்படும் இளநீர், டையர்கள், குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னே சேரும் நீர், வீட்டில் வளர்க்கும் செடிகளின் சட்டிகளில் சேரும் நீர் என்று ஒரு இடத்தையும் விடுவதில்லை இந்த எதிரி.

மூடிவைக்காத தண்ணீர் குடங்கள், தண்ணீர் தொட்டிகள் யாவும் இந்தக் கொசுப்புழுவுக்கு சொர்க்கச் சோலைகள்.

சரி. டெங்கு நோயை எவ்வாறு கண்டு கொள்வது ?

1. மற்ற வைரஸ் காய்ச்சல் போல் அல்லாமல் அதீத உடல் உஷ்ணம் (102 டிகிரி) நோய் ஆரம்பித்த அன்றிலிருந்தே இருக்கும்.

2. பொறுத்துக்கொள்ள இயலா உடல் வலி இருக்கும். கண்களுக்கு பின்னே வலி இருக்கும்.

3. காய்ச்சலோடு வயிற்றுவலி இருக்கலாம். கருப்பாக மலம் செல்லலாம்.

4. கடும் காய்ச்சல் மூன்று நாள் இருக்கும் . நான்காவது நாள் திடீரென்று குணமாகிவிடும். இது நல்ல அறிகுறி அல்ல. உள்ளங்கை உள்ளங்கால் ஜில்லென்று ஆகும். இதுவும் நல்ல அறிகுறி அல்ல.

டெங்குவை தடுப்பது எப்படி ?

டெங்குவுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன. டெங்குவுக்கு பரப்பும் கொசுவை ஒழிப்பதே நல்லது.

1. சேமிக்கும் தண்ணீரை மூடி இட்டு வைக்கவும்

2.தினமும் வீட்டைச் சுற்றி குப்பை சேராமல் கண்காணிக்க வேண்டும். ஒன்று அப்புறப்படுத்தவும் அல்லது எரித்து விடவும்.

3. குழந்தைக்கோ தங்களுக்கோ காய்ச்சல் வருமாயின் தங்கள் குடும்ப மருத்துவரையோ குழந்தைகள் மருத்துவரையோ அணுகவும்

4. மருந்துக்கடைகளில் சுய மருத்துவம் பார்ப்பது நல்லதல்ல. போலி மருத்துவர்கள் ஆங்காங்கே தோன்றுவார்கள். அவர்களை இனங்கண்டு தவிர்க்கவும்.
அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகுவது சாலச்சிறந்தது .

4. கொசுப்புழுவை அழிக்க அபேட் எனும் புழுக்கொல்லி சேமித்து வைத்திருக்கும் நீரில் லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் தெளிக்கவேண்டும்

5. கொசுவாக உருவாகி நோய் பரப்பினால் பைரித்ரம் எனும் கொசுக்கொல்லி மருந்து டீசலில் கலந்து புகையாக அடிக்கப்படும். ஏடிஸ் பகலில் கடிக்கும் கொசு மற்றும் வீட்டுக்குள்ளே வாழ்வதால் காலையும் மாலையும் வீட்டுக்குள் புகை அடிக்கப்பட வேண்டும்.

6. கொசு நம்மை கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்தலாம். முழுக்கை சட்டைகளை குழந்தைகளும் நாமும் அணியலாம்

டெங்குவைத் தடுப்போம் !
இன்னுயிர்களைக் காப்போம் !!

நன்றி : Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

Post a Comment

0 Comments