மழை கரைக்கும் உப்பு உற்பத்தி! - கலங்கும் மீமிசல் தொழிலாளர்கள்நாம் தினமும் சாப்பிடும் உணவில் சரியான அளவில் உப்பு சேர்த்தால் மட்டுமே சாப்பாட்டின் முழுச் சுவையையும் உணரமுடியும். அன்றாட வாழ்வில் உப்பு மிகவும் முக்கியமான ஒன்று.
தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் அதிகளவு உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி,வேதாரண்யத்திற்குப் பிறகு புதுக்கோட்டையில் மீமிசல், கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே இங்குள்ள பகுதிகளில் உப்பு உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. உப்பளங்கள் இருந்த பகுதிகள், இன்று இறால் பண்ணைகளாக உருவெடுத்துவிட்டன. உப்பு உற்பத்தி செய்யும் பரப்பளவானது, நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. பரம்பரையாக உப்பளம் தொழில் செய்துவந்த உரிமையாளர்களோ மாற்றுத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
உப்பு உற்பத்தியை மட்டுமே தொழிலாகக் கொண்ட தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம். தொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதார உதவிகள் கேட்டு அரசிடம் பலமுறை கோரிக்கைவைத்தும் எந்தப் பலனும் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சில ஏக்கர் மட்டுமே நடைபெறுகிறது.
இங்குள்ள வ.உ.சி நகரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தித் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இங்குள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே தொடர்ந்து மழை பெய்து வருவதால், உப்பு உற்பத்தித் தொழில் இங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

3 மாத காலம் வரையிலும் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல், தொழிலாளர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.

30 வருடங்களாக உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் புஷ்பவள்ளியிடம் பேசினோம். "எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து இந்தத் தொழில்லதான் இருக்கேன். இதைத் தவிர, வேற எந்தத் தொழிலும் எனக்குத் தெரியாது. பாத்தி கட்டுவதில் தொடங்கி வாருவது, உப்பை ஒன்றுசேர்ப்பது முதல் களத்துக்குக் கொண்டுபோய் கொட்டுவது வரைக்கும் எல்லா வேலையும் செய்யணும்.

முன்னாடி எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் உப்பளங்களாகத்தான் இருக்கும். தினமும் டன் கணக்குல லோடு போகும். இன்னைக்கு ரொம்பவே குறைஞ்சுபோச்சு. ஒருநாள் வேலை கிடைச்சா கூலி ரூ.250 கிடைக்கும். மழை பெஞ்சா எங்களுக்கு வேலை இருக்காது. அந்தப் பணமும் கிடைக்காது. இப்போ, பருவமழை இல்லை.

ஆனா, விட்டுவிட்டு மழை பெய்துகிட்டு இருக்கு. எங்களோட வேலை ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. 15 நாளுக்கு அப்புறம்தான் வேலைக்கு வந்தோம். இந்தா, இன்னைக்கு மழை வந்திருச்சு. இனி, என்னைக்கு எங்களுக்கு வேலை கிடைக்கும்னு சொல்ல முடியாது. உப்புக்கும் சரியான விலை கிடைக்கலை. அதனால, உற்பத்தியைச் சுருக்கிக்கிட்டு வர்றதா உரிமையாளர்கள் சொல்றாங்க.

இது எங்களுக்குத்தான் ஆபத்து. எங்களுக்குச் சம்பளம் எல்லாம் கூட்டிக் கொடுக்க வேண்டாம். தொடர்ச்சியாக வேலைகொடுங்கள். அதுவே போதும் என்றுதான் நாங்க உரிமையாளர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு வர்றோம். இப்போ, தொடர்ச்சியாக வேலை இல்லாமல், 3 பெண் பிள்ளைகளை வச்சிக்கிட்டு ரொம்பவே நான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்" என்றார் வேதனையுடன்.

தொழிலாளர் ராமு, "40 வருஷமா குடும்பத்தோடு இந்தத் தொழில்தான் செஞ்சிக்கிட்டு வர்றோம். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மழை பெய்தால்தான் கொண்டாட்டம். அப்பத்தான் தொடர்ச்சியா அவங்களுக்கு வேலை இருக்கும்.

ஆனா, எங்களுக்கு அப்படி இல்லை. மழை பெய்தால், எங்க தொழிலுக்கு ஆபத்து. பருவமழைக் காலங்களில் சுத்தமாக நாங்க இந்தத் தொழிலில் ஈடுபட முடியாது. 4 மாசம் வரைக்கும் எங்களுக்கு வேலை இருக்காது. அந்த நேரத்துல ரொம்பவே குடும்பத்துல கஷ்டம் இருக்கும். முன்னாடி வேலை செஞ்சு சேமிச்ச பணத்தை வச்சு அந்த மாதங்களை ஓட்டணும்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தின்போது நிவாரணம் மாதிரி உதவித்தொகை கொடுக்கிறாங்க. ஆனா, எங்களுக்கு அப்படி இல்லை. காலம்காலமாக உப்பு உற்பத்தித் தொழில்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கிற எங்களுக்கு எந்தவித உதவியும் அரசாங்கம் செய்யுறதில்லை. அரசாங்கத்திடம் போராடிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை.

உப்புக் காத்துலதானே கிடக்கிறோம். உப்பளத்திலே தொடர்ச்சியா நடக்கிறதால, தொழிலாளர்களுக்கு தோல் நோய் பிரச்னைகள் உள்ளிட்டவை எல்லாம் வரும். அதையெல்லாம், சமாளிச்சுக்கிட்டுத்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம்" என்றார்.

உப்பள உரிமையாளர் ஜெயச்சந்திரனிடம் பேசினோம், "கஜா புயலுக்குப் பிறகு தற்போது, உப்பு உற்பத்தி என்பது குறைந்திருச்சு. முன்னாடி எல்லாம் வெளியூர்களுக்கு எல்லாம் அனுப்பிக்கிட்டு இருந்தோம்.

உப்பளத் தொழிலாளர்கள் இன்னைக்கு உள்ளூர்க் கருவாட்டுக்குத்தான் அனுப்புறோம். உப்புக்குச் சரியான விலை கிடைக்கலை. உப்பளத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைதான் இருக்கு. அடுத்து, பருவமழை தொடங்க இருப்பதால், இத்தோட பணியை நிறுத்திடுவோம். இனி, ஜனவரிக்குப் பிறகுதான் வேலை நடக்கும். எங்களுக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு ரொம்பவே பாதிப்புதான். அரசுதான் தனிக் கவனம் எடுக்கணும்" என்றார்.

நன்றி: விகடன்

Post a Comment

0 Comments