தமிழகத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய பயணிகள் வேண்டுகோள்



தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களில் ஆங்கிலம், ஹிந்தி மொழியோடு  தமிழிலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுதில்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய உள்நாட்டு சேவையும், துபை, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு சேவையும் என நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட  விமான சேவைகள் உள்ளன.

இதில் 80 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்கின்றனர்.
இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்தவர்களாக உள்ளனர். விமான  நிலையத்தில் விமானங்கள் வருகை, தாமதம் உள்ளிட்ட விவரங்களை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்  அறிவிப்பு செய்கின்றனர்.

அதே நேரத்தில் விமானத்தினுள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்பு செய்கின்றனர்.
இதனால் விமானத்தில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செய்யும் அறிவிப்புகுறித்து புரிதல் இல்லாமல் தடுமாறுகின்றனர்.
விமானத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட அவர்களின் வேகமான உச்சரிப்புகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில் விமானத்தில் அவசர காலத்தில் ஆங்கிலத்தில் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அதை புரிதல் இல்லாமல் பயணிகள் பதற்றம் அடைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வந்த இயக்குநர் தங்கர்பச்சான் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 அதில் தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழில் பதவி ஏற்றனர். தமிழகத்தில் தமிழை காக்கும் பல்வேறு இயக்கங்கள் விமானத்தில் ஆங்கிலம், ஹிந்தி மொழியோடு தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
 எனவே மக்களவை உறுப்பினர்கள் மற்றும் பயணிகள்   விமான நிறுவனங்களை தமிழகத்தில் இயக்கும் போது தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் விமானத்தில் தமிழில் அறிப்புகள் வர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது:

விமான நிறுவனங்களிடம்  தமிழிலும் அறிவிப்பு செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் வலியுறுத்தினால், விமான நிறுவனங்கள், தமிழில் அறிவிப்பு செய்யக்கூடும்.

நமது மக்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய வலியுறுத்தினால் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.

Post a Comment

0 Comments