ஓடுதளத்தில் சென்றபோது கண்டறியப்பட்டது: திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு



மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் தினமும் இரவு 10.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும்.
பின்னர் அந்த விமானம் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இரவு 11.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இதேபோல் நேற்று முன்தினம் இரவு அந்த விமானம் திருச்சி வந்தது.

பின்னர் பயணிகளுடன் அந்த விமானம் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல புறப்பட்டது. அந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். ஓடுதளத்தில் சென்றபோது, விமானத்தின் எலிமினாட்டரில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்தினார்.

பின்னர் அந்த விமானம், விமான நிலையத்தில் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் பயணிகள் விமானத்தில் அமர்ந்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.

இதையடுத்து தனியார் விடுதியில் 138 பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் தங்களது விமான பயண தேதிகளை மாற்றி அமைத்தும், விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் தொழில்நுட்ப கோளாறுடன் புறப்பட்டு சென்றிருந்தால், விமானம் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் விமானி, தொழில்நுட்ப கோளாறை சரியான நேரத்தில் கண்டறிந்ததால், விமானம் புறப்படவில்லை. இதனால் 174 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து 138 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூர் நோக்கி நேற்று மாலை 5 மணி அளவில் புறப்பட்டு சென்றது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments