காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு விரைவு ரயில்கள் இயக்க தஞ்சை MP-யிடம் மனுபட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில் பழனிமாணிக்கம் எம்பியிடம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்களை இயக்கக் கோரி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் வெள்ளிக்கிழமை இரவு  பட்டுக்கோட்டைக்கு வந்தார்.

இங்குள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரிடம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலர் வ. விவேகானந்தம், மக்கள் தொடர்பாளர் எம். கலியபெருமாள்,  தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு விவரம்:

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இருமுனைகளில் இருந்தும் தினசரி இயக்க வேண்டும்.

திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித்தடத்தில்  ஏற்கெனவே மீட்டர் கேஜில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களை தற்போதும் இயக்க வேண்டும்.

மேலும் இத்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் கேட் கீப்பர்களையும், ரயில் நிலையங்களுக்குத் தேவையான அலுவலர்கள், பணியாளர்களையும்  உடனடியாக நியமிக்க வேண்டுமென  மனுவில் கூறப்பட்டிருந்தது.

திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்குரைஞர் ஆர். ராமசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ. ஆர். வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக அதிராம்பட்டினம் சென்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்பியிடம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பினர் மனு அளித்தனர்.

இதையடுத்து அவர் தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள ராஜாமடம் கிளை வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எச். அஸ்லம் தலைமையிலான குழுவினர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

மேலும்,  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும்  சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து மரைக்கா குளத்திற்கு தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தொலைவுக்கு வடிகால் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்தும் அவரிடம் விளக்கினர்.

அப்போது, திமுக முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் பா. ராமநாதன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ராம. குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments