அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரரும், அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.


டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நிர்வாகிகள் பலரும் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தலில் வெற்றி கனியை ஈட்டி  மீண்டும் எம்எல்ஏ ஆனார் செந்தில் பாலாஜி.

இதனிடையே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததால் பல்வேறு நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அமமுக முக்கிய நிர்வாகிகளான வி.பி.கலைராஜன், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இவர் அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதியின் சகோதரர் ஆவார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த பரணி கார்த்திகேயன், "புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன். திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்" என்றார்.

Post a Comment

0 Comments