சம்பா சாகுபடிக்கு தேவையான, உரம்-பூச்சி கொல்லி மருந்து தயார்- கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்



சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசன வசதி பெறும் பகுதிகளில் சம்பா சாகுபடி பணியானது ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய தாலுகாக்களில் சுமார் 27 ஆயிரத்து 400 ஏக்கர் டெல்டா பாசன பகுதிகளாகும். இந்த பகுதிகளில் இதுவரை சுமார் 22 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்பட உள்ள தண்ணீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய கால ரகங்களை விதைப்பு செய்வது ஏற்றதாகும். இதனால் பயிர் வடகிழக்கு பருவமழையின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் நல்ல மகசூலை பெற இயலும். விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்கு மத்திய கால நெல் ரகங்களான டி.கே.எம்.13, கோ.50, ஏ.டி.டீ39, ஏ.டி.டீ.50, என்.எல்.ஆர்.34449 போன்ற ரகங்களின் சான்று பெற்ற விதைகள் 140.41 மெட்ரிக் டன் அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் போதுமான மத்திய மற்றும் குறைந்த வயதுடைய ரகங்கள் உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அரசு வேளாண் விற்பனை மையங்களில் இருப்பில் உள்ள விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம் ஆகியவற்றின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சம்பா சாகுபடிக்கு தேவையான 4,733 மெட்ரிக் டன் யூரியா, 3,347 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 5,696 மெட்ரின் டன் காம்ப்ளக்ஸ், 1,700 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1,781 மெட்ரிக் டன் பொட்டா‌‌ஷ் உரங்கள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் மையங்களில் தயார் நிலையில் உள்ளன. நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பொருளாதார சேதத்திற்கு மிகும்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக 23 மெட்ரிக் டன் தூள் மருந்தும், 1.75 லட்சம் லிட்டர் திரவ பூச்சிகொல்லி மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன.

எனவே, தற்போது உள்ள நீரினை கொண்டு, மத்திய கால ரகங்களை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வாய்ப்பு உள்ள இடங்களில் விதைப்பு பணி மேற்கொள்ளவும், திருந்திய நெல் சாகுபடி அல்லது எந்திர நடவு தொழில்நுட்பங்களை அதிக இடங்களில் மேற்கொண்டு நாற்றங்கால் அமைத்து சம்பா பருவத்தில் சாகுபடி செய்து பயன் பெறலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments