பள்ளியிலும், சுற்றுப்புறத்திலும் கொசுக்கள் உருவாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்



பள்ளியிலும், சுற்றுப்புறத்திலும் கொசுக்கள் உருவாகாமல் பார்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி பேசினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையின் படியும், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளியினை குறு வள மையமாக கொண்டு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளை இணைத்து புதிய குறுவள மையமாக மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு), குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோருக்கு கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பின்னர் அப்போது பேசியதாவது:-

 பள்ளிகல்வி முதன்மை செயலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோர் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக குறுவள மையங்கள் ஏற்படுத்தி தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஒன்றாக இணைத்து உள்ளார்கள்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக

எனவே குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியின் கீழ் இணைக்கப்பட்டு உள்ள பள்ளிகளின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை உருவாக்கிட வேண்டும். குறுவளமைய மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், குறுவளமைய மையங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ள குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து அந்தந்த குறுவள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் பாடுபட வேண்டும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் என் வீட்டிற்கும், தெருவிற்கும், பள்ளிக்கும் நான் ஒரு தூய்மை தூதுவர் என எழுதி வழங்கப்பட்டு உள்ள மாதிரி அட்டையில் வகுப்பு வாரியாக ஒவ்வொரு மாணவரின் புகைப்படத்தினை ஒட்டி அதில் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கையொப்பம் இட்டு கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு பிரசாரம்

பின்பு மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம், ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம் என உறுதிமொழி எடுக்க செய்து மாணவர்களை கொண்டே அப்பகுதியில் தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது மழைக்காலம் என்பதால் பள்ளியிலும், சுற்றுப்புறத்திலும் கொசுக்கள் உருவாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ராகவன், ராஜேந்திரன், திராவிடச் செல்வம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், பள்ளி துணை ஆய்வாளர்கள், குறுவள மைய தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு), குறுவள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments