அறந்தாங்கி அவுலியாநகர் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு



புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறந்தாங்கி அவுலியாநகரில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆவுடையார்கோவில் தாலுகா பாப்பான்கோட்டையை சேர்ந்த பால்வண்ணன் என்பவர் வீரசைவ பேரவை நிர்வாகிகளுடன் வந்து கொடுத்த மனுவில், கடந்த 4-ந் தேதி எனது தாயார் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்பதற்கு பணத்துடன் சென்றபோது, 3 பேர் கடத்தி கொலை செய்து, தேவக்கோட்டை அருகே உள்ள ஆற்றுப்படுகையில் புதைத்தனர். எனது தாயாரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

எனது தாயார் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசின் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் எனது கல்வி தகுதிக்கு ஏற்ப ஒரு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்த வீரசைவ பேரவை நிர்வாகிகள், பால்வண்ணனுக்கு அரசு வேலை கொடுக்காவிட்டால், மாநில அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறினார்கள்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் புத்தாம்பூர், செம்பாட்டூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூரில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், கந்தர்வகோட்டை ஊராட்சியில் பணிபுரிகின்ற துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக கடந்த 31.12.2018-ம் ஆண்டு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விபரமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 2019-20-ம் ஆண்டிற்கான தற்காலிக தினக்கூலி தொடர்பான கலெக்டரின் உத்தரவை ஊராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்த மறுக்கிறது. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கிராமசபை கூட்டம்

வடவாளம் ஊராட்சி பொதுமக்கள் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை செயலாளர் சத்தியமூர்த்தி கொடுத்த மனுவில், வடவாளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி நடத்தித்தர வேண்டும் என கூறியிருந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

அறந்தாங்கி அவுலியாநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பயன்பாட்டிற்காக நெடுங்குளம், குளம் என 2 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி இருந்தது. இந்நிலையில் இந்த குளங்களை சுத்தப்படுத்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, சுத்தப்படுத்த முயன்றபோது, தனிநபர்கள் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு போலீசார் போலி புகார்களை அளித்து, எங்களை மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கிராம மக்கள் பயன்பாட்டிற்காக குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறியிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments