ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரகேடு மற்றும் தாமதமான சிகிச்சையால் நோயாளிகள் அவதி



ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக்கேடாக உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவுடையார்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏராளமானவர்கள் காய்ச்சல், டெங்கு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள இருந்தபோதிலும், துப்புறவு பணியாளர்கள், அறுவை சிகிச்சை உதவியாளர்கள், மகப்பேறு உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவமனையில் சுகாதாரக்கேடு அதிகரித்து உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால், சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வருபவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை உதவியாளர்கள் இல்லாததால், அறுவை சிகிச்சை செய்ய வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலை 8 மணிக்கே வெளிநோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மட்டும் ஓபி 9 மணிக்கு மேல்தான் தொடங்குகிறது. இதனால் சிகிச்சைக்காக வரும் விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு செவிலியரே சீட்டு வழங்க வேண்டிய அவலமும் உள்ளது. டெங்கு, மர்ம காய்ச்சல் தொடங்கி உள்ள நிலையில், சுகாதாரக்கேடாக உள்ள ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையை முறையாக பராமரிப்பதோடு, மருத்துவமனையில் வெளிநோயாளி பரிசோதனையை காலை 8 மணிக்கு தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments