அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி அருகே சேதமடைந்த பயணியர் நிழற்குடை கழிவுநீர் வாய்க்காலில் இருக்கைகள்



அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி அருகே பயணியர் நிழற்குடையில் சேதமடைந்துள்ளது. இங்கிருந்த இருக்கை கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டுள்ளது. இதனால் உட்கார இடமில்லாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில், மீமிசல், கோட்டைப்பட்டினம், திருச்செந்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள ஒரு வழிப்பாதையான பழைய ஆஸ்பத்திரி சாலை, பாரதிதாசன் சாலை வழியாக செல்கின்றன.

இந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அறந்தாங்கி எம்எல்ஏவாக இருந்த ராஜநாயகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2015-16 நிதியாண்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அந்த பயணியர் நிழற்குடையில் தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்து, தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். இந்த பயணியர் நிழற்குடையை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள், நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை சேதப்படுத்தி உள்ளனர். இந்த இருக்கைளில் ஒன்று, நிழற்குடைக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டு உள்ளது. மேலும் நிழற்குடையின் உள்பகுதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரச தேவைக்காக பயணிகள் இந்த நிழற்குடைக்கு வந்தாலும், பேருந்து வரும் வரை நின்று கொண்டே இருக்க வேண்டியநிலை உள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட, அதுவும் நகரின் முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு, கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டுள்ளதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இனி மேலாவது இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய அக்கறை கொண்டு, பழைய ஆஸ்பத்திரி சாலையில் உள்ள நிழற்குடையில் சேதப்படுத்தப்பட்ட இருக்கைகளை சீரமைத்து, பயணிகள் அமர்வதற்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments