கோபாலப்பட்டினத்தில் கள ஆய்வு மேற்கொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்திற்கு கடந்த 02.10.2019 புதன்கிழமை அன்று
நடந்த கிராம சபை கூட்டத்தில் அறிவித்தபடி நேற்றைய தினம் 07.10.2019 திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் ஒன்றிய உதவி பொறியாளர் திரு.குருநாதன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திரு.வீரபாகு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன் ஆகியோர் கோபாலப்பட்டினத்தை சுற்றிலும் ஏற்பட்டிருக்கும் அவலநிலையை ஆய்வு செய்தனர்.


இந்த களஆய்வில் ஊர் ஜமாத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அவுலியா நகரில் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதி, ஆலமரம் ஈத்கா மைதானம் அருகில் குவிந்துள்ள குப்பை, பழையகாலனி வழியாக ஊற்றுக்கு செல்லும் வழியில் குவிந்துள்ள குப்பை, காட்டுகுளம் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை மற்றும் அருகே கால்வாயில் தேங்கி கிடைக்கும் கழிவுநீர் மற்றும் சின்ன பள்ளிவாசல் அருகில் குவிந்து கிடைக்கும் குப்பை போன்றவற்றை நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். 

மேலும் அவுலியா நகர் பகுதியில் சாக்கடை செல்வதற்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டி வந்திருந்த அதிகாரிகளிடம் ஊர் ஜமாத் மற்றும் அப்பகுதி மக்கள் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர்.


நேரடியாக பார்வையிட்ட  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன் அவர்கள் கூறுகையில்:

கோபாலப்பட்டினம் பகுதியை பார்வையிட 07.10.2019 திங்கள்கிழமை அன்று வருவதாக கடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தனி அலுவலரிடம் அறிவிப்பு செய்ய சொல்லி அறிவுறித்திருந்தேன். அதனடிப்படையில் 07.10.2019 (நேற்று) வருகை தந்துள்ளேன் என்பதை விளக்கியவர். தற்பொழுது பார்வையிட்டதில் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. எனவே சாக்கடை வெளியேறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நாளையோ (இன்று) அல்லது நாளை மறுநாளோ தற்காலிக தீர்வு எடுக்கப்படும் என்றும் நிரந்தர தீர்வு காண்பதற்கு அந்த சாக்கடை செல்லக்கூடிய பகுதி இரண்டு ஊராட்சிகளில் வருவதால் அதில் உள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டு நிரந்தர தீர்வு எடுக்கப்படும் என்றும், ஆங்காங்கே குவிந்துள்ள குப்பைகளை நாளைய தினமே (இன்று) அகற்றப்படும் என்றும் உறுதிமொழி அளித்தார்.

மேலும் கோபாலப்பட்டினம் ஊர் ஜமாத்திடம் ஊரில் தினமும் சேரும் குப்பைகளை அடுத்த நாளே அகற்றப்படும் என்றும் ஊரில் அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பை கிடங்கு அமைக்க ஊர் ஜமாத் இடம் ஒன்றை தேர்வு செய்து தரும்படி கோரிக்கையையும் விடுத்தார். 

எனவே கோரிக்கையை ஏற்ற ஊர் ஜமாத்தினர்கள் விரைவில் இடம் தேர்வு செய்து தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்கள். 
 
அதனை தொடர்ந்து 02.10.2019 அன்று கிராமசபை கூட்டத்தில் அறிவித்திருந்த அவுலியா நகர் பகுதிக்கு இரண்டு சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ஊராட்சி தனி அலுவலர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் நமதூரில் இருந்து கிராமசபையில் கலந்து கொண்ட சகோதரர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன் அவர்களிடம் இரண்டு சாலைகள் சம்மந்தமாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில் தற்பொழுது அந்த இரண்டு சாலைகளும் ரத்தாகிவிட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அவுலியா நகர் பகுதியில் உள்ள ஆறு தெருக்களின் சாலையும் மிகவும் மோசமடைந்துள்ளது எனவே அவுலியா நகர் பகுதியில் உள்ள ஆறு சாலைகளையும் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊராட்சி சார்பாக புதிய சாலை அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.

கிராமசபையில் கலந்து கொண்ட கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் கூறுகையில்: 

கிராமசபையில் கலந்து கொண்டால் நமதூருக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறலாம் என்றும் இன்று நடைபெற்ற கள ஆய்வில் நமதூருக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே கூறப்பட்டது. ஆனால் நமக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறுவதற்கு மனு கொடுத்தால் மட்டுமே நம்முடைய தேவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இனி வரும் காலங்களில் வாய்மொழியாக சொல்வதை விட பொதுமக்கள் மனுவாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் வரக்கூடிய காலங்களில் நமது ஊராட்சியில் நடைபெறக்கூடிய கிராமசபை கூட்டத்தில் ஊரில் உள்ள அனைத்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நமதூருக்கு தேவையான வசதிகளை தீர்மானமாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

கோபாலபட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் ஊரின் நலனுக்காக நம் ஊருக்கு என்ன என்ன தேவைகள் இருக்கின்றன அரசிடம் இருந்து என்ன மாதிரியான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் அந்த திட்டங்களில் நமதூருக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஒரு உயர்ந்த நோக்கத்தோடு தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அந்த கிராம சபையில் நம் ஊர்மக்களுக்காக கோபாலபட்டினம் சகோதர்கள் பங்கேற்றனர். எனவே  அவர்களுக்கு GPM MEDIA ADMIN TEAM சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.









கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments