GPM மக்கள் மேடை..! யார் அவர்கள்..? தெரிந்து கொள்வோம்..



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சில மண்ணின் மைந்தர்களால் கடந்த
2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊருக்கு ஏதாவது நம்மால் முடிந்தளவு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பு தான் GPM மக்கள் மேடை என்ற அமைப்பாகும்.

ஆரம்பிச்சிட்டாங்க சரி ஏதாவது நோக்கம்னு ஒன்னு இருக்குமுல அது என்னனு சொல்லுங்க பாஸ்..

சரி அவர்களுடைய நோக்கம் என்ன..?

2020-ல் கோபாலப்பட்டிணம் அனைத்து விதமான அடிப்படை விஷயங்களிலும் தன்னிறைவு பெற்ற கிராமம் என்று  ஜனாதிபதி அவர்களிடம் விருது பெறுவதே அவர்களின் நோக்கம்...

கல்வி, சுகாதாரம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளில்  தன்னிறைவு பெற்ற கிராமமாக கோபாலபட்டிணம் அமைய வேண்டும் என்பது GPM மக்கள் மேடை உறுப்பினர்களின் நோக்கம்.

சரி அதனை எவ்வாறு செய்வார்கள்?

GPM மக்கள் மேடை என்ற அமைப்பு வாட்ஸ்ஆப் குழுமம் ஒன்றை உருவாக்கி  அதில் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து அதன் மூலம் அவர்களிடமிருந்து மாத நன்கொடையாக ரூ.500 பெறப்படுகின்றது.

மாதம் மாதம் திரட்டப்படும் நன்கொடையை வைத்து சில நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

பெரியளவில் திட்டங்கள் செய்யவேண்டுமென்றால் சிறப்பு நன்கொடையாக அறிவிக்கப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்பட்டு பெரிய தொகையிலான திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக GPM மக்கள் மேடையின் மூலமாக செய்த சாதனைகள்தான் என்ன?

இரண்டு வகையாக திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

1.குறுகியகால நல திட்டங்கள்
2.தொடர் நல திட்டங்கள்

இப்ப நம்ம குறுகியகால திட்டங்கள் பற்றி பார்ப்போம்...

1. முதல் திட்டமாக 2015-ஆம் ஆண்டு நோன்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்கினார்கள்.

2. இரண்டாவது திட்டமாக 2016-ஆம் ஆண்டு மருத்துவ முகாம் நடத்தினார்கள்.

3. மூன்றவாது திட்டமாக 2016-ஆம் ஆண்டு GPM மக்கள் மேடையின் கனவுத் திட்டனமான அடக்க மைதானம் சுற்றுசுவர் அமைத்தார்கள்.

4. 2016-ஆம் ஆண்டு மரணித்தவர்கள் வீட்டு முன்பாக மையத்தை பார்க்க வருபவர்கள் அமருவதற்காக இலவசமாக சாமியான பந்தல் மற்றும் நார்காலிகள் திட்டம் செயல்பட்டு வருகிறது.

5. 2016-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு 7 புதிய கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

6. 2017-ஆம் ஆண்டு நெடுங்குளம் அருகில் 4 பொது கழிவறைகள் கட்டப்பட்டு அவை இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகின்றது.

7. 2017-ஆம் ஆண்டு சீமை கருவேல மரம் ஒழிப்பு திட்டத்தின் மூலம் கோபாலப்பட்டிணத்தில் இருந்த கருவேல மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.

8. 2017-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணம் அடக்க மைதானத்தில் நடப்பட்ட செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் வசதி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

9. 2017-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயில் மாற்றியமைக்கப்பட்டது.

10. 2017-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசலில் கண்காணிப்பு கேமரா (CCTV) அமைக்கப்பட்டது.

11. 2017-ஆம் ஆண்டு நெடுங்குளம் மற்றும் காட்டுகுளம் ஆகியவைகளுக்கு தூர்வாரும் பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டது.
காட்டுகுளம் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டது.

12. 2018-ஆம் ஆண்டு அவுலியா நகர் இறை இல்லம் மற்றும் சுற்றுவேலி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது .

13. 2019-ஆம் ஆண்டு நெடுங்குளம் அவுலியா நகர் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்கபட்டது.

GPM மக்கள் மேடையின் தொடர் நலத்திட்டங்கள் என்ன..?

1. 2015-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்கு வருடங்களாக மாணவர்களின் கல்வியின் நலனை கருத்தில் கொண்டு நமது ஊர் கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு GPM மக்கள் மேடையால் ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு இன்றுவரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறார்கள்.

2. 2015-ஆம் ஆண்டு ஈத்கா மைதானத்தில் மரங்கள் நடப்பட்டு அதை பராமரிப்பதற்கு சம்பளத்திற்கு நபர் ஒருவரை நியமித்து இன்றுவரை அவருக்கு சம்பளம் வழங்கியும் மைதானத்தில் அமைந்திருக்கும் மரங்களையும் பராமரித்து வருகிறார்கள்.

3. 2016-ஆம் ஆண்டு முதல் நமது ஊர் பெண்கள் மதரஸாவில் ஆலிமா பட்டம் பெறும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு பாராட்டு கேடயமும், பரிசுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

4. 2016-ஆம் ஆண்டு முதல் நமது கோபாலபட்டிணம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களை பெறும் மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பாராட்டு கேடயமும், பரிசுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

5. 2017-ஆம் ஆண்டு முதல் கோபாலப்பட்டிணம் மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி வழிகாட்டி கருத்தரங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

6. 2018-ஆம் ஆண்டு முதல் பள்ளி கோடைகால விடுமுறைகளில் கோபாலப்பட்டிணம் சிறுவர்களுக்கு இலவச கத்னா திட்டம் மூலம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யப்படுகிறது.

7. கடந்த 08.04.2019 அன்று GPM மக்கள் மேடையின் மிகப்பெரிய மற்றும் ஒரு கனவுத்திட்டமான குடிநீர் திட்டம் திறப்பு விழா நடைபெற்று அதன் மூலம்  கோபாலப்பட்டிணம் மக்களுக்கு தூய்மையான முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மிகக் குறைந்த விலையில் தங்கு தடையில்லாமல் குடம் ஒன்று ரூ.5-க்கு குட்டியானை வாகனத்தில் வீட்டு வாசலுக்கே சென்று டோக்கன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் GPM மக்கள் மேடை குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள மிஷினில் ரூ.5 நாணயம் செலுத்தினால் தானியங்கி முறையில் செயல்பட்டு குடிதண்ணீர் வழங்கும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து GPM மக்கள் மேடையின் மற்றுமொறு கனவுத் திட்டமான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19.10.2019 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதன் மூலம் நமது கோபாலப்பட்டினம் மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த திட்டமானது தொடர்நல திட்டமாகும்.

GPM மக்கள் மேடையின் தனிச்சிறப்புகள் என்ன..?

1.GPM மக்கள் மேடை - அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு.

2. GPM மக்கள் மேடையின் தாரக மந்திரம் நிதியும் நீதியும் இரு கண்கள்.

3. GPM மக்கள் மேடைக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என எந்த பதவியும் கிடையாது. Bylaw தான் தலைமை.

4. GPM மக்கள் மேடையில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக ஏழு நபர்கள் செயல்படுகின்றனர். அவர்களை வாக்கெடுப்பு மூலம் மற்ற மக்கள் மேடை உறுப்பினர்கள் தேர்வு செய்கின்றனர். அவர்களின் பொறுப்பு காலம் ஒரு வருடம் ஆகும். மேலும் ஆலோசனை குழு உறுப்பினர்களில் ஐந்து நபர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்களாகவும் மற்ற இரண்டு நபர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

5. எந்த ஒரு திட்டமானாலும் வாட்ஸ் ஆப் குழுமத்தில் கலந்தாய்வு செய்து பின்னர் வாக்கெடுப்பு நடத்தி அதில் வரும் முடிவுகளின்படியே திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.

6. மாதந்தோறும் வரவு, செலவு கணக்குகளை மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டு கணக்கு வரவு, செலவுகளில் உள்ள கேள்வி மற்றும் சந்தேகங்களை GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வு வைக்கப்பட்டு கணக்குகளில் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கப்படும் பட்சத்தில் ஆலோசனை குழு அதற்கு தகுந்த விளக்கத்தை தெறிப்படுத்துவார்கள்.

7. மாதம் ஒரு முறை 16 மற்றும் 17 தேதிகளில் பொது கலந்தாய்வு வைக்கப்படுகிறது. இதில் மக்கள் மேடை உறுப்பினர்கள் தங்களுடைய பொதுவான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மக்கள் மேடையின் விதிகளுக்கு உட்பட்டு தெரிவிக்கும் விதமாக அவை நடத்தப்படுகிறது.

8. GPM மக்கள் மேடை வாட்ஸ்ஆப் குழுமம் ஆலோசனை குழுவின் கட்டுப்பாடுகளின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் மட்டுமே மக்கள் மேடை உறுப்பினர் அனைவரும் தகவல் பரிமாறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் மற்ற நாட்களில் அட்மின் மட்டுமே தகவலை பகிர்வார்கள். இந்த நிகழ்வு எதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் தேவையில்லாத Forward தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதற்கு இந்த முறையானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..
 
தகவல்: ஆலோசனை குழு 4, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.

தொகுப்பு: GPM மீடியா அட்மின் குழு

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments