மணமேல்குடி அருகே மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள் ஒரு குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் அவலம் கண்டுக்கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்



மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் மின்மாற்றியில் உள்ள பழுதை சீரமைக்காததால், தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு தினையாகுடி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதனால் ஒரு குடம் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மணமேல்குடியை அடுத்த தினையாகுடி பெரிய அய்யனார் கோயில் பின்புறம் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து தினையாகுடி கூட்டுக்குடிநீர் திட்டம், தினையாகுடி குடியிருப்புக்கான குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு மின்சாரம் செல்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் தினையாகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்க முடியவில்லை.

இதனால் பொதுமக்கள் மழைத் தண்ணீரையும், ஏரியில் கிடக்கும் தண்ணீரையும், ஒரு குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் நாகுடி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின்பணியாளர்கள் மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சீரமைக்க முயன்றனர். இருப்பினும் சீரமைக்க முடியவில்லை. இதனால் கடந்த பல நாட்களாக தினையாகுடி பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் உடனடியாக பழுதடைந்த தினையாகுடி மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி பொறுத்தி, மின்இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments