புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற செய்து வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி



டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற செய்து அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர் உள்பட 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அங்கன்விடுதியைச் சேர்ந்தவர் அரிபாஸ்கர். இவரது மனைவி புனிதாதேவி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி அருகே கண்டியன்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மகன்கள் பரமசிவம், ரவிச்சந்திரன் ஆகியோர் அரிபாஸ்கரை தொடர்பு கொண்டு உங்களது மனைவியை தேர்வில் வெற்றிபெற செய்து அதன் மூலம் அவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் இதற்கு நீங்கள் ரூ.15 லட்சம் தர வேண்டும் எனக்கூறி உள்ளனர்.

இதை நம்பிய அரிபாஸ்கர் ரூ.10 லட்சத்தை பரமசிவம்,ரவிச்சந்திரன் ஆகியோரிடம் கொடுத்தார். ஆனால் கூறியபடி புனிதாதேவிக்கு பரமசிவம், ரவிச்சந்திரன் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெறச்செய்து அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அரிபாஸ்கர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.

இதைத்தொடர்ந்து பரமசிவம், ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.4 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து அரிபாஸ்கர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக பரமசிவம், ரவிச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதில் பரமசிவம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments