அறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள் -தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைப்பு



அறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள் -தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு பூச்சிகளுடன் அரிசிகள் சிதறி கிடந்தன. இதனால் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி-சுப்ரமணியபுரம் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் குணசேகர், தாசில்தார் சூரியபிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் துர்நாற்றம் வீசிய இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு தலா 10 கிலோ எடை கொண்ட 23 அரிசி பைகள் கெட்டுப்போன நிலையில், குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கஜா புயல் நிவாரணம்

இதையடுத்து அதிகாரிகள், அருகே உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வேறு அரிசி பைகள் அல்லது மூட்டைகள் உள்ளனவா? என பார்த்தனர். அங்கே 35 தார்ப்பாய்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து 35 தார்ப்பாய்களையும் வருவாய் துறையினர் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் குணசேகர் கூறுகையில், அரசர்குளம் கீழ்பாதி பகுதிக்கு கஜா புயல் நிவாரணத்திற்காக வந்த அரிசி பைகளும், தார்ப்பாய்களும் ஊராட்சியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்கும் அளவிற்கு இல்லை. அவை எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கிராம சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆனதால், அரிசி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால், ஊராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவற்றை குழி தோண்டி புதைத்து உள்ளனர் என்றார். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-சுப்பிரமணியபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments