63 ஆண்டுகளாக மக்களை துரத்தும் டெங்குடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும், ஆண்டுதோறும் இந்த நோய் தாக்குதல் தொடர்கிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டில், இதுவரை சுமார் 4,500 பேர் டெங்கு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகிறது. கடந்த 2018-ல் (4,486) இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம்.

இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் (காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட 3 உயிரிழப்புகள், டெங்குவினால் ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி விசாரணை நடைபெறுகிறது). பல டெங்கு நோய் தாக்குதல்கள் பதிவு செய்யப்படுவதில்லை, அல்லது வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த எண்ணிக்கைகள், டெங்கு நோய் தாக்குதலை பற்றி ஒரு அரைகுறையான சித்திரத்தையே அளிக்கிறது.

தமிழகத்தில், 2017-ம் ஆண்டு, டெங்கு காய்ச்சலால் 65 பேர் இறந்தனர். மேலும் 23,294 பேர் டெங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளானார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இது தான் அதிகபட்சமானது.

இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் 1956-ல் முதல் டெங்கு தாக்குதல் பதிவானது. இன்று இது ஏறக்குறைய நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

டெங்குவை சமாளித்தல்

டெங்கு பற்றியும், அது உருவாக காரணங்கள் பற்றியும், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்து இருந்தாலும், ஆண்டு தோறும், டெங்கு நோய் தாக்குதல் உருவாகி, பல உயிர்களை பலி வாங்குகிறது.

“டெங்குவை ஒழிப்பது மிகவும் கடினமான காரியம். டெங்கு வைரஸ் கிருமிகளை பரப்பும் ஏடிஸ் கொசுகளை ஒழிப்பது தான் டெங்குவை கட்டுப்படுத்த உள்ள ஒரே வழியாகும். எந்த ஒரு சுகாதாரத் திட்டமும் வெற்றி பெற, பொதுமக்களின் ஈடுபாடு மிகவும் அவசியமானது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில், கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் நோய் தொற்றியலுக்கான தேசிய நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானியான டாக்டர் சந்தோஷ் குமார்.

குறிப்பிட்ட காலங்களில், சுழற்சி முறையில் டெங்கு நோய் பரவுகிறது. பொதுவாக தமிழகத்தில் ஜூன் மாதம் உருவாகும் டெங்கு, செப்டம்பர் முதல் நவம்பர் வரை உச்சமடைகிறது.

2017-ல் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் டெங்குவினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த முறை வடக்கு மாவட்டங்களான வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அதிக அளவில் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மனிதர்களினால் உருவாக்கப்பட்ட நீர் தொட்டிகளிலும், மரபொந்துகள், மூங்கில் குருத்துகள் போன்ற இயற்கையான உறைவிடங்களிலும் உருவாகும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுவும் இந்த வைரஸ் கிருமியை பரப்புகிறது என்று “மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில், தேசிய பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கொசு முட்டைகளை உண்ணும் மீன்களை பயன்படுத்தும் உயிரியல் முறைகள், ரசாயனங்களை தெளித்தல் மற்றும் மூலாதாரங்களை குறைக்கும் இதர முறைகள் போன்றவை பாதுகாப்பான முறையில் இதை கட்டுபடுத்த சில வழிமுறைகள் ஆகும். கொசுக்களில் வைரஸ் மறு உற்பத்தியாவதை வொல்பாச்சியா பாக்டீரியா தடுக்கிறது என்பதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த இதை பயன்படுத்த சாத்தியமுள்ளது. இதை பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), நாடு தழுவிய அளவில் நடத்திய ஆய்வில், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் டெங்கு நோய் அதிக அளவில் பரவுகிறது என்று கண்டறிந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், டெங்கு நோய் பாதிப்பு சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

டெங்கு வைரஸ்

*  கொசு கடித்த பின் 4 முதல் 10 தினங்களில் நோய் உருவாகும்.

*  நோய்க்கான அறிகுறிகள் இரண்டு முதல் ஏழு நாட்கள் இருக்கும்.

*  சளி–காய்ச்சல் போன்ற நோய், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் டெங்கு அதிர்ச்சி நோய்க்குறிகள் மற்றும் ரத்தக் கசிவுடனான டெங்கு காய்ச்சலாக மாறலாம்.

*  நோய் அறிகுறிகள் இல்லாத நபர்களிடம் இருந்தும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் மூலம் டெங்கு வைரஸ் பரவும்.

*  ஏடிஸ் கொசுவின் முட்டைகள், உலர்ந்த சூழல்களில் ஒரு ஆண்டு வரை உயிர்ப்புடன் இருக்கும். நீருடன் தொடர்பு உருவான உடன் அவற்றில் இருந்து குஞ்சுகள் வெளியேறுகின்றன.

*  இதர வகை வைரஸ்களினால் உருவாகும் இரண்டாம் நிலை டெங்கு காய்ச்சல், அதிக வீரியம் மிகுந்த டெங்கு நோய் உருவாக வகை செய்கிறது.

அறிகுறிகள்

*  104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு கடுமையான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, குமட்டல், வாந்தி, கண்களின் பின்பகுதியில் வலி, கடுமையான தலைவலி, சுரபிகள் வீக்கம், தசை மற்றும் மூட்டு வலி

*  கடுமையான வடிவங்களில், மூச்சு திணறல், பிளாஸ்மா கசிவு, உடம்பில் திரவங்கள் சேர்ப்பு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்

*  கடுமையான டெங்குவின் அறிகுறிகள், நோய் தாக்கிய பின் மூன்று முதல் ஏழு நாட்கள் கழித்து ஏற்படும்; உடலின் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைதல், ரத்த வாந்தி, மூச்சிரைப்பு, கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு, உடல் சோர்வு மற்றும் நிலையற்றத்தன்மை.

*  அடுத்த 24 முதல் 48 மணி நேரங்கள் நோயாளிக்கு மிக முக்கியமானவை என்பதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு தேவைப்படும்.

*  டெங்கு நோயாளிகள் உயிரிழக்க, ரத்த நாளங்களில் ஏற்படும் கசிவுகள் தான் முக்கிய காரணம். இதனால் ரத்தப் பற்றாக்குறை உருவாகி, பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்படும்.

சிகிச்சை

 *  டெங்கு காய்ச்சலுக்கு என்று தனித்துவமான சிகிச்சை முறைகள் அல்லது தடுப்பூசிகள் கிடையாது.

*  நோயாளிகள் ஓய்வெடுக்க வேண்டும். திரவ உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

*  காய்ச்சல் மற்றும் மூட்டு வலியை குறைக்க பாரசெட்டமால் மருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆஸ்பிரின் அல்லது இபோபுருபென் ஆகியவை ரத்த கசிவை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உட்கொள்ளக் கூடாது.

*  பப்பாளி இலைகள் மற்றும் மலை வேம்பு சாறு ஆகியவை காய்ச்சலின் அளவை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

முக்கிய  தகவல்கள்

* ஏடிஸ் கொசு மூலம் டெங்கு பரவுகிறது.

* வீடுகளில் உள்ள பாத்திரங்கள், ஏர் கூலர்கள், பிரிட்ஜ்களில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரில் இந்த கொசு உற்பத்தியாகிறது.

* மக்கள் தொகை அதிகரிப்பு, வேகமான நகரமயமாக்கல், உலகமயமாக்கல், பருவநிலை மாற்றம் மற்றும் பயனளிக்காத முறையில் செய்யப்படும் கொசுகளை கட்டுபடுத்தும் முயற்சிகள் ஆகியவை டெங்கு நோய் பரவலை ஊக்குவிக்கிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments