புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை..! மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பாதுகாப்பு
விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் ஆழ்குழாய் கிணறு தோண்ட, ஆழப்படுத்த அல்லது புனரமைக்க அரசின் கிணறுகள் தோண்டுவதற்கான மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்குப்படுத்துதல் விதியின் கீழ், கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி பொதுமக்கள் தங்கள் வீட்டிலோ, விவசாய நிலங்களிலோ அல்லது வணிக பயன்பாட்டிற்கோ ஆழ்குழாய் கிணறு அமைக்க உரிய படிவத்தில் படிவம்
அ தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் நிர்வாக அலுவலரிடம் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம ஊராட்சி தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புடைய அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து அதற்கான அனுமதியை நிபந்தனைகளுடன் உரிய படிவத்தில் படிவம் ஆ வழங்குவார்.

கிணறு தோண்டும் பணிகளை மேற்கொள்ளும் நபர் அதற்கான பதிவு சான்றினை படிவம் ஊ பெற்ற பின்னரே பணி துவங்க வேண்டும். கிணற்றின் வகை, ஆழம், குறுக்களவு, பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை பணி நடக்கும் இடத்தில் கவனத்தை கவரும் வகையில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

கிணறு தொடர்பான பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் முள்வேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்பட வேண்டும். பணி இடைவேளையின்போதும், பணி நிறுத்தப்பட்ட பின்னரும் அந்த கிணறு சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பணி முடிவுற்ற பின்னர் கிணற்றை சுற்றி உள்ள சகதி குழிகளையும், கால்வாய்களையும் நிரப்பி மூடவேண்டும். முன்பிருந்த தரைமட்ட நிலைக்கு கொண்டு வரவேண்டும். கைவிடப்பட்ட கிணறுகள், களிமண், மணல், சிறு கற்ககள் மற்றும் உரிய பிற
பொருட்களை கொண்டு தரைமட்ட அளவிற்கு மூடப்படவேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எஃகு தகடுகளாலும் ஒன்றோடு ஒன்று இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியை கொண்டோ அல்லது இரும்பு குழாயின் மேற்புறத்தை உறுதியான மூடியை கொண்டு மூடி திருகு மரையாணிகளை கொண்டு குழாயுடன் இணைத்து மூட வேண்டும்.

மேலும் அனுமதியில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறும் பட்சத்தில் அனுமதி அளித்த அலுவலர், அனுமதி பெற்றவருக்கு தன் தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு அளித்த பின்னர் அனுமதியை ரத்து செய்யப்படும். எனவே, அனைத்து பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி முறையான அனுமதி பெற்று பாதுகாப்பான முன்னேற்பாட்டுடன் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments