புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு..!



கடலில் கலக்கும் எண்ணெய்யை கப்பல் உதவியுடன் அகற்றுவது குறித்த புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவர் உருவாக்கிய படைப்பு தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஆசிரியர் சி.சந்திரபோஸ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து 8-ம் வகுப்பு மாணவர் அ.செந்தில் அரசு ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். பின்னர், அம்மாணவருடன் இணைந்து இது தொடர்பான படைப்பு உருவாக்கப்பட்டது.

மாவட்ட அளவில் தேர்வாகிய இந்தப் படைப்பு, கரூரில் அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற 47-வது அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்தது.

இதையடுத்து, இந்தப் படைப்பு தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகி உள்ளது. மாணவர் செந்தில் அரசு மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் ந.வள்ளிநாயகி உள்ளிட்டோர் பாராட்டினர்.

இதுகுறித்து ஆசிரியர் சந்திர போஸ் கூறியது:

ஈராக்கில் இருந்து கப்பல் மூலம் சென்னை காமராஜர் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் கொண்டுவரப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 2.5 டன் எண்ணெய் கடலில் கலந்து மாசடைந்தது. எண்ணெய்யை உடனே வெளியேற்ற போதுமான வசதி இல்லாமல் ஒரு கட்டத்தில் வாளி மூலமும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, இதற்கு பிரதான தொழில்நுட்பம் தேவை என்பதை அறிந்து படைப்பு உருவாக்கப்பட்டது. அதாவது, கப்பலில் இரு புறமும் நெகிழி சக்கரங்களை பொருத்தி அவற்றை மோட்டாருடன் இணைத்து சுழலச் செய்யும்போது எண்ணெய் படலங்கள் சக்கரங்களை நோக்கி வரும். பின்னர், சக்கரங்களின் அருகே உலோக தட்டுகளைப் பொருத்தி அதன் வழியே கப்பலில் எண்ணெய்யை சேகரித்துவிடலாம்.

இதன் மூலம் கடலில் கொட்டிய எண்ணெய் துரிதமாக அகற்றப்படுவதுடன், அகற்றப்பட்ட எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் உபயோகப்படுத்தலாம். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்படும். மாநில அளவில் தேர்வாகி உள்ள எங்கள் படைப்பு தேசிய அளவிலும் தேர்வாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments