`ஹிஜாப் அணிந்தது குற்றமா?' - குடியரசுத் தலைவர் விழாவில் தங்கபதக்கத்தை வாங்க மறுத்த புதுச்சேரி பல்கலை மாணவி..!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது.
அதில் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.


விழாவில் முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டத்தில் தங்கம் வென்ற கேரள இஸ்லாமிய மாணவி ரபீஹாவின் தலையில் இருந்த ஹிஜாப்பை அகற்றும்படி பாதுகாப்பு அதிகாரிகள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவி ரபீஹா, ``வேண்டுமானால் என்னை இன்னொரு முறை சோதனை செய்து கொள்ளுங்கள். நான் ஏன் வெளியேற வேண்டும்” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், அவர் கோஷம் போட்டுவிடுவார் என்று நினைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

விழா அரங்கின் வெளியே நிறுத்தப்பட்ட அவர், குடியரசுத் தலைவர் விழாவை முடித்துவிட்டுச் சென்ற பிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் சென்றதை அடுத்து பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்ற மாணவர்களுக்குப் பட்டமும், மெடல்களையும் வழங்கினார்.


தொடர்ந்து மாணவி ரபீஹா அழைக்கப்பட்டதால் மேடையேறிய அவர் பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டார். தங்கப் பதக்கத்தை வாங்க அவர் மறுத்துவிட்டார். மேடையில் இருந்த அனைவரும் வாங்கிக்கொள்ளும்படி திரும்பத் திரும்பக் கூறியும் அதை வாங்க மறுத்த அவர், ``குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதை நான் ஏற்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ரபீஹா, ``கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நான், 2018ம் ஆண்டு படிப்பு நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றிருந்தேன். விழா தொடங்கும் முன்பு என்னை அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமரவைத்தனர். நான் ஹிஜாப் அணிந்தது குற்றமா எனத் தெரியவில்லை. என்னை உடனே வெளியே அழைத்து வந்துவிட்டார்கள். எதற்காக என்னை வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் போராட்டத்தில் மாணவர்கள் அமைதியாக நடத்தி வருகின்றனர். என்னை வெளியேற்றி தனியாக அமரவைத்தது அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து, எனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து விட்டேன். பட்டத்தை மட்டும் பெற்றேன். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சென்றபிறகே என்னை உள்ளே அனுமதித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளுக்காக அந்த மெடலை நான் வாங்கவில்லை” என்றார்.

என்ன காரணம் என்றே கூறவில்லை!

இந்தநிலையில், இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணவி ரபீஹா, ``எனது பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் பெருமையுடன் வாங்குவது குறித்து நிறைய முறை கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இதன்மூலம் நாடு முழுமைக்கும் அமைதியாக ஒரு செய்தியை கொண்டுசெல்லும் வகையில் முடியும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடிவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பெண்ணாக, ஒரு மாணவியாக, ஒரு இந்தியனாக எனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை வாங்க நான் மறுத்துவிட்டேன்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தனது ஹிஜாப்பை அகற்றும்படி யாரும் கூறவில்லை என்றும் தான் ஏன் வெளியேற்றப்பட்டோம் என்ற காரணத்தையும் யாரும் கூறவில்லை என்றும் அந்த மாணவி விளக்கமளித்திருக்கிறார்.

Source: விகடன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments