அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டும் வாட்ஸ்அப் குழு..வளர்ச்சிப் பாதையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமம்!



வளர்ச்சிப் பாதையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமம்!
மழையை மட்டும் நம்பிய நெல் விவசாய பூமி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைந்து நிற்கும் வேலிக்கருவைகள்.. நீர்நிலைகளாய் ஆங்காங்கே கண்மாய்களும் ஊரணிகளும் மட்டுமே.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஏம்பல் கிராமம். 320 வீடுகள். 1500 பேர் கொண்ட மக்கள் தொகை. மழையை மட்டும் நம்பிய நெல் விவசாய பூமி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைந்துநிற்கும் வேலிக்கருவைகள்.. நீர்நிலைகளாய் ஆங்காங்கே கண்மாய்களும், ஊரணிகளும் மட்டுமே. அதிலும் மழை பெய்தால் மட்டுமே தண்ணீரைப் பார்க்க முடியும். விவசாய காலம் தவிர மற்ற நாள்களில் பக்கத்து நகரங்களான காரைக்குடி, அறந்தாங்கி, தேவகோட்டை, புதுவயல், புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு கூலி வேலைக்குச் செல்கிறார்கள் இங்குள்ள மக்கள். நிலையான தொழிலுக்கு வழியில்லை. சிலர் வேலை தேடி வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்கள்வழி கிடைக்கும் பொருளாதாரம்தான் ஏம்பல் வட்டாரத்தை ஓரளவுக்கு சற்று தூக்கிப் பிடித்திருக்கிறது.


இப்பின்னணியைக் கொண்ட ஏம்பல் கிராமத்தின் இளைஞர்கள், பொதுமக்கள், முன்னாள் அரசுப்பள்ளி மாணவர் சங்கத்தினர், விவசாயிகள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், ஜமாத் தலைவர்கள் என சாதி, மதம், அரசியல் எல்லைகளைக் கடந்து பல தரப்பினரும் ஒன்றுகூடி `ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம்’ எனும் அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியுள்ளனர். அக்குழுவினர் செய்துவரும் காரியங்கள் அனைவரையும் இப்போது திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இக்குழுவினரை ஒருங்கிணைத்து ஒற்றைப்புள்ளியில் வைத்திருப்பது வழக்கம்போல் வாட்ஸ்அப்தான். என்றாலும் இந்த வாட்ஸ்அப் குழு வெறும் குட்மார்னிங், குட்நைட் போன்ற பல்சுவைச் செய்திகளின் பொழுதுபோக்கு பகிர்தலுக்கு மட்டுமானதல்ல. அதையும் தாண்டி இந்த வாட்ஸ்அப் குழு, ஏம்பல் வட்டாரத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான வாழ்வியல் களமாகச் செயல்படுகிறது.

இந்த வாட்ஸ்அப் குழுவில் இதுவரை 138 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் மாவட்ட கலெக்டர் முதல் கிராம தலையாரிவரை வருவாய்த்துறையினர் இடம்பிடித்துள்ளனர். இதேபோல் மின்சாரவாரியம், வேளாண்மைத் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, நூலகத்துறை, போக்குவரத்து துறை, ஊடகத்துறை எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் ஏம்பல் வட்டாரத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அனைத்து அரசுத்துறை முக்கிய அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என அதிகார மையத்தின் அனைவரையும் ஒரே இடத்தில் குவிய வைத்திருக்கிறது இந்த வாட்ஸ்அப் குழு.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சளைக்காமல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டுபோய்விடுகிறது இக்குழு. அதேவேளை அதிகாரிகளின் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் தொடர் கோரிக்கைகள் மூலம் அவர்களிடம் அந்தப் பணியைச் செய்து முடிக்காமல் விடுவதில்லை. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

-பழ.அசோக்குமார்

நன்றி :- விகடன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments