குடியுரிமை திருத்த மசோதாவை கிழித்தெரிந்து ஒவைசி ஆவேசம்..!குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லீமல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மதரீதியான பாரபட்சம் என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டை ஒருமைப்படுத்த முயல வேண்டும். பிரிக்க முயற்சி செய்யாதீர்கள்.

தேசிய குடியுரிமை பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு எங்கே செல்வார்கள்? பாரபட்சத்தை விளைவிக்கும் இந்த மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றும் முயற்சிதான் இந்த மசோதா என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவார் மகளுமான, சுப்ரியா சுலே பேசுகையில், நமது ஜனநாயகம் முழுக்கவுமே, சமத்துவம் பேசுகிறது. அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 15வது பிரிவுகள், நாட்டு மக்களிடையே பாரபட்சம் பார்க்க கூடாது என வலியுறுத்துகிறது. எனவே, உள்துறை அமைச்சரின் சமாதானம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று தெரிவித்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவை லோக்சபாவிலேயே வைத்து கிழித்தெறிந்தார், AIMIM கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி. அவர் பேசுகையில், “முஸ்லிம்களை நீங்கள் குடிமக்களாக சேர்க்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஏன் முஸ்லிம்களை இவ்வளவு வெறுக்கிறீர்கள்? எங்கள் குற்றம் என்ன? சீனாவால் ஒடுக்கப்பட்ட மக்களை இந்திய குடிமக்களாக ஏற்கலாம் என இந்த சட்டமசோதா கூறுகிறதே ஏன்? இந்த சட்டம் 2வது தேச பிரிவினையை குறிக்கோளாக கொண்டுள்ளது. இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது” என்று அவர் கூறினார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments