கீரமங்கலத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வேன் மோதி சிறுமி பலிகீரமங்கலத்தில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வேன் மோதி சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளுடைய அண்ணனின் கால் துண்டானது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் (நரிக்குறவர் காலனி) பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் எலிகளை பொறி வைத்து பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி, மகன் தேவா(வயது 9), மகள் சுகந்தி(4). தேவா, கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடிக்கு சுகந்தி சென்று வந்தாள்.

தற்போது சுரேஷ் மற்றும் தேவா ஆகியோர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால், மாலை நேர பூஜை செய்து விரதம் விடுவதற்காக சுரேஷ், வசந்தி மற்றும் தேவா, சுகந்தியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றனர். பஸ் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த புதுக்கோட்டை கேப்பரையில் உள்ள வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சுகந்தி, தேவா ஆகியோர் வேனின் அடியில் சிக்கினர். தேவாவின் காலில், வேன் சக்கரம் ஏறி நின்றது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் சத்தம் போட்ட பின்னர், வேன் மீண்டும் நகர்த்தப்பட்டு தேவா, சுகந்தி ஆகியோர் மீட்கப்பட்டனர். தேவாவின் கால் துண்டாகி, மோட்டார் சைக்கிளில் சிக்கிய நிலையில் இருந்தது. சுரேஷ், வசந்தி ஆகியோர் காயமின்றி தப்பினர்.

இந்நிலையில் படுகாயத்துடன் கிடந்த சுகந்தி, தேவா ஆகியோரை, அப்பகுதியில் இருந்த கார் டிரைவர்கள் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால், அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுகந்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவாவின் கால் துண்டான நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

இதற்கிடையே துண்டான நிலையில், மோட்டார் சைக்கிளில் சிக்கி இருந்த தேவாவின் கால் மீட்கப்பட்டு, தனியாக அறந்தாங்கி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. துண்டான காலை பொருத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. விபத்தை ஏற்படுத்திய பாலிடெக்னிக் கல்லூரி வேன் டிரைவர் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் ஆறுமுகத்தை (வயது 35), கீரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிறுமி பலியானதும், அவளுடைய அண்ணனின் கால் துண்டானதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments