சென்னையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் பேரணி..!



இந்தியாவின் ஒற்றுமைக்காக தேசியக்கொடி ஏந்தி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 650 அடி நீள தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்புகள் பிரம்மாண்ட பேரணி நடத்தின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.


இதையடுத்து, ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து அக்கோ காலனி வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பெண்கள் , சிறுவர் - சிறுமிகளுடன் கையில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்றனர்.


இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் 650 அடி நிளம் கொண்ட தேசியக்கொடியை ஏந்தியபடி சென்றனர். பேரணி முழுதும் அனைவரும் கைகளில் தேசியக்கொடியை ஏந்தி அணிவகுத்தனர். காலை 11 மணிக்கு ஆரம்பித்த பேரணி ஆலந்தூரில் அக்கோ காலனி என்ற இடத்தில் பகல் 1 மணிக்கு நிறைவுப்பெற்றது. இதில் ஆரம்பம் முதல் பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும்விதமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

கூட்டத்துக்கு தமிழகம் முழுதும் பல மாவட்டங்களிலிருந்து வேன்கள் மூலம் வந்து இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்கள், மருத்துவ உதவிக்கு முகாம்கள், 3 ஆம்புலன்ஸ் வேன்களை கூட்ட அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மட்டுமே 3000 பேர்வரை கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர்கள் பேரணியில்...



பின்னர் நடைபெற்ற கூட்டத்தில்,

“குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமைச் சட்டத்திருதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சுதந்திரபோராட்டத்தின் வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள இந்தியாகேட் நுழைவு வாயிலில் உள்ள வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் கல்வெட்டில் இஸ்லாமியர்களின் பெயர்களும் இருக்கிறது.



அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. அப்படியிருக்கும்போது மதத்தின் அடிப்படையில் குடியுரிமைச் சட்டம் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமியர்கள், இலங்கைத்தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பாதிப்பான சட்டம்தான் இது.


அடுத்து என்.ஆர்.சி சட்டம் கொண்டுவர உள்ளனர். அஸ்ஸாமில் மட்டும் கொண்டு வந்துள்ளதால் அங்கு 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடந்துவருகிறது ஆனாலும் அதை பொருட்படுத்த மறுக்கிறார்கள்.


இந்தியா முழுதும் இதற்கு எதிராக ஏற்பட்ட எதிர்ப்பலையை பிரதமரும், அமைச்சரும் புரிந்துக்கொள்ளவேண்டும். ஆகவே சட்டத்தை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும்” என கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

இந்தியா அனைவருக்குமான நாடு, இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி அதன் அடையாளமாக தேசியக்கொடியை கையில் ஏந்துவதாக தெரிவித்தனர். மதியம் 1 மணிக்கு மேல் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

இணை ஆணையர் மகேஷ்வரி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை விமான நிலையம் நோக்கிச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலைல் சிக்கிக்கொள்ளாதபடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ஏராளமான சகோதர்கள் கலந்து கொண்டனர் .

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments